நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மாவிற்கு உத்தரவிட்டு உள்ளனர்.
நுபுர் சர்மாவின் கருத்து
இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா அவதூறாக பேசியது இந்தியா அளவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் மிக பெரிய சர்ச்சையாக மாறியது. அதைதொடர்ந்து பாஜக கட்சி நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து விலக்கியுள்ளது. மேலும், நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரியும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. இந்த கலவரங்கள் சற்று குறைந்த நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்ட ராஜஸ்தான் மாநில உதய்பூர் சேர்ந்த டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இது இன்னும் மிக பெரிய கலவரமாக மாறியது. நாடு முழுவதும் மீண்டும் வன்முறைகளும் போராட்டங்களும் கிளம்பியது.
உச்சநீதிமன்றம் கண்டனம்
இந்நிலையில், நுபுர் சர்மா தன் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், ‘என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் என் வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றம் செய்து தர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்தது உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘நுபுர் சர்மாவின் தேவையில்லாத அறிவற்ற உளறலால் நாடு முழுவதும் கலவரத்தை தூண்டியது. நாட்டின் இந்த அமைதியற்ற நிலைக்கு நுபுர் சர்மாவின் உளறல் தான் காரணம். பிற மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலும், இரு பிரிவினருக்கு இடையே மோதல்களை தூண்டும் வகையிலும் நுபுர் சர்மா பேசியுள்ளார்.
பொது மன்னிப்பு கேட்க வேண்டும்
மேலும், நுபுர் சர்மா தனது உயிருக்கு ஆபத்து என மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நுபுர் சர்மாவின் தேவையற்ற பேச்சால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. உதய்பூரில் டெய்லர் படுகொலைக்கு காரணமே இவரத்தின் பேச்சுதான். நாட்டில் தற்போது நடைபெறும் அசம்பாவிதத்திற்கு நுபுர் சர்மா என்ற தனிநபர் மட்டுமே பொறுப்பு. ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் இப்படிப்பட்ட கருத்துக்களை எப்படி தெரிவிக்கலாம்? சில நேரங்களில் அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டால் இப்படி எல்லாம் பேசலாம் என்று நினைக்கிறார்களா?
நுபுர் சர்மா மன்னிப்பும் கேட்கவில்லை, தனது கருத்தை வாபஸ் பெறவில்லை. நுபுர் சர்மா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலும் நுபுர் சர்மாவை ஏன் போலீசார் கைது செய்யமால் இருக்கிறீர்கள்?. மேலும், நுபுர் சர்மா தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மாவிற்கு உத்தரவிட்டனர்.