தமிழ்நாட்டில் பல வளங்கள் இருந்தாலும் மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் ஏன் தொழில் முதலீட்டை ஈர்க்க முடியவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சிறந்த மனிதவள மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு ( Human resources ) விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) என்ற தனியார் அமைப்பு முன்னெடுத்து நடத்தியது.
ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிகழ்ச்சியில் பங்கேற்று சிறந்த அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இந்தியா படிப்படியாக மீண்டு வருவதாகவும், பிற அனைத்தையும் விட மனிதர்கள், மனிதர்களின் நலன்களே பிரதானம் என்று கூறினார்.
மேலும் பேசிய ஆளுநர், மனிதர்கள் வளங்கள் அல்ல, அவர்கள் உணர்வுகள், பிணைப்புகள், கலாச்சார செறிவு மிக்கவர்கள் என்று பேசினார். மேற்கத்திய நாடுகளில் இருந்து பரவிய மனிதவளம் என்ற சொல்லை தற்காலத்திலும் தொடர்ந்து பயன்படுத்துவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இந்தியா சிறந்து விளங்கும்
தற்போதைய இந்தியாவில் மனித ஆற்றல் அதிகரித்துள்ளது. பல இளைஞர்கள் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாகி வருகின்றனர். 2047-லில் இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது பல மடங்கு வளர்ச்சியை பெற்ற நாடக இந்தியா விளங்கும். வறுமையை ஒழித்து நாட்டிற்கு தேவையான வளங்களை அதிகப்படுத்துவோம். நாட்டில் அனைவருக்கும் வேலை, வளமான இந்தியா என்பதே இலக்கு என்றும் அதுவே இந்தியாவை உயர்த்தும் எனவும் அதற்கு தொழிற்துறை வேகமாக வளர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக தொழில்கள் தேவை
‘தமிழ்நாட்டில் பல விதமான வளங்கள் இருந்தும் மஹாராஷ்டிர, ஹரியானா போல் ஏன் தமிழ்நாட்டினால் தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவுக்காக தமிழ்நாடு வளர வேண்டும் என்றும் மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்’ என கிண்டியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டு கொண்டுள்ளார்.