தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத் திருமண விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதிமுக விவகாரம்
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் துவங்கியது. அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சி
அதே நேரத்தில் சென்னை திருவான்மியூரில் நடந்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேத்தி தீப்தி, விஷ்வக்சேனா திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமையேற்று நடத்தினார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
ஸ்டாலின் பேச்சு
அவர் பேசுகையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்துள்ளேன். அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத் திருமணம் நடப்பதை எண்ணி நாமெல்லாம் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
விமர்சனம்
இன்னொரு பக்கத்தில், திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அந்தப் பிரச்சினைக்கெல்லாம் போக விரும்பவில்லை. அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்கள். திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள். திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது என்ற உணர்வோடு நாம் இருக்கிறோம்.
வாழ்த்து
மேலும், இந்தத் திருமண நிகழ்ச்சிக்குப் பல்வேறு கட்சியின் தலைவர்கள், நம்முடைய தோழமைக் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் என அனைவரும் இங்கே வாழ்த்த வந்திருக்கிறீர்கள். அனைவரின் சார்பில் நீ ஒருவனே வாழ்த்தினால் போதும் என்று சொல்லி, இங்கே என்னை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் அனைவரின் சார்பில் நான் மணமக்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.