சேலத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை ஆறு முறை தலையில் கல்லைப்போட்டு கொன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள கூடமலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முருகேசனின் மூத்த மகள் நந்தினிக்கு வரும் திங்கட்கிழமை திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மகள் ரோஜா தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஒருதலை காதல்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கடம்பூர் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர் ஒருவர் ரோஜாவை காதலிப்பதாக கூறி, ரோஜா செல்லும் கல்லூரி பேருந்தை மறித்து ரோஜாவிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து, ரோஜா பெற்றோரிடம் கூறுகையில் ரோஜாவின் பெற்றோர் அந்த இளைஞரை கடுமையாக கண்டித்துள்ளனர்.
பெட்ரோல் ஊற்றி
மூத்த மகள் நந்தினியின் திருமணத்திற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க பெற்றோர் சென்றிருந்த நிலையில், ரோஜா வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த சாமிதுரை ரோஜாவின் வீட்டிற்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ‘எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என கூறி பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரோஜாவின் அக்கா நந்தினி, ரோஜாவின் மீது தண்ணீரை ஊற்றியுள்ளார். இதையடுத்து, ரோஜா தப்பி ஓட முயன்றிருக்கிறார். அப்போது, ரோஜா தவறி விழுந்ததால், சாமிதுரை ரோஜாவின் உடலில் ஆறு முறை கல்லை போட்டு ரோஜாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
4 தனிப்படைகள்
ரோஜாவின் கொலையை அடுத்து, உறவினர்கள் கொங்கவல்லி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரோஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாகியுள்ள கொலையாளி சாமிதுரையை தேடி வருகின்றனர்.
கண்ணீர் மல்க
ரோஜாவை கொடூரமாக கொலை செய்து தப்பிய சாமிதுரை போலீசார் விரைவாக கைது செய்ய வேண்டும் என ரோஜாவின் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர். ‘எங்கள் மகளுக்கு நடந்த கொடுமை வேறு எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது, எனவே, சாமிதுரை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என ரோஜாவின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.