சமூகம் - வாழ்க்கை

அலைபேசி கதிர்வீச்சு! – ஆபத்துகளும் தீர்வுகளும்

நம் கண்முன்னேயே சிட்டுக்குருவிகள் காணாமல் மறைந்து போனதற்கு, அலைபேசி கோபுரங்களின் மின்காந்த அலைவீச்சுதான் காரணம் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. நமது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் அலைபேசிகள் ஏற்படுத்துகின்ற கேடுகள் கொஞ்சநஞ்சம் அல்ல.

எனவே, அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்துவதற்கு உதவியாக, சில கருத்துகளை, உங்கள் கவனத்துக்கு முன்வைக்கின்றேன்.

அலைபேசிகளை எப்போதும் கைகளிலேயே வைத்துக் கொண்டு இருக்காதீர்கள். அவை, வானொலி மற்றும் மின்காந்த அலைகளை, உங்களை நோக்கி ஈர்க்கின்றன.

அதனால், கை விரல் கைநரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். அலைபேசியை இயக்கும்போதும், அணைத்து வைக்கும்போதும், அதற்கான பொத்தானை அழுத்தியபின்பு, உடனே கீழே வைத்து விடுங்கள்.

அந்த வேளையில்தான், கதிர் வீச்சு கூடுதலாக இருக்கும். இணைப்பு கிடைத்தபிறகு, கையில் எடுத்துப் பேசுங்கள்.

அலுவலகத்திலும், வீட்டிலும் இருக்கும்போது, கூடியவரையிலும், கைக்கு எட்டுகின்ற தொலைவில், இரண்டு அடிகள் தள்ளியே வைத்து இருங்கள். பேசும்போது மட்டும் உங்கள் கைகளில் இருந்தால் போதும்.

ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு, எதிர்முனைக்கு சத்தம் போகிறதா? என்று கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. ஏனெனில், அடுத்த தொலைபேசிக்கு அழைப்பு செல்லும்போதுதான், கதிர்வீச்சு, மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும்.

அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியபின், அலைபேசியை உங்கள் கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து, இணைப்பு கிடைக்கிறதா என்பதைத் திரையில் பாருங்கள். அதன்பிறகு உரையாடலைத் தொடங்குங்கள்.

அலைபேசியில் ஏதேனும் பிரச்சினை என்றால், அதுவரை நீங்கள் சேமித்து வைத்து இருந்த நூற்றுக்கணக்கான எண்களையும் இழக்க நேரிடும். எனவே, உங்களுடைய தொடர்பு எண்களை, ஒரு குறிப்பு ஏட்டில் தனியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய குறிப்பு ஏடுகளில் அல்ல; அதுவும் தொலைந்து விடக்கூடும்.

எனவே பெரிய டைரியில் பதிவு செய்து, அதை வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். அதில் தொடர்ந்து புதிய எண்களையும் பதிவு செய்து கொண்டே வாருங்கள்.

வெளியே எடுத்துக் கொண்டு போக வேண்டுமானால், அதற்கெனத் தனியாக இன்னொரு கையேட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அலைபேசிகளை மின்னூட்டம் செய்யும்போது பேசக் கூடாது. எச்சரிக்கை. உங்கள் காதுச் சவ்வு, மிகமிக மிகமிக மென்மையானது.

கிழிந்து விட்டால், கடைசி வரை கேட்க முடியாது. பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

உறங்கச் செல்வதற்கு முன்பு நீண்ட நேரம் பேசினால், நீங்கள் முழுமையாக உறங்க முடியாது. அந்தப் பேச்சு தொடர்பாகவே உங்கள் மூளை சிந்தித்துக் கொண்டே இருக்கும். எனவே, இரவு ஒன்பது மணிக்கு மேல் பேசாதீர்கள்.

கண்டிப்பாக மூளைக்கு 6 மணி நேரம் முழுமையான ஓய்வு தேவை. எப்போது போன் வரும் என்று எதிர்பார்த்து, தலைக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பது மிகமிகத் தவறு.

இப்படி, அலைபேசிகளின் நன்மை, தீமைகள் என எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்வது என்றால், அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்தினால் நன்மை; தவறாகப் பயன்படுத்தினால் தீமை.

Related posts