பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடிகராக அறிமுகமாகியிருக்கும் கன்னட படத்திற்கு அவர் ஒரு ரூபாய் தான் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை ஓர் அறிமுகம்
கரூர் மாவட்டத்தின் சொக்கம்பட்டி என்ற ஊரில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கோவையில் உள்ள பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்தார். பின்னர் லக்னோவில் MBA பட்டம் பெற்ற இவர் 2011ம் ஆண்டு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்தார். முதலில் பயிற்சி ஏஎஸ்பியாக பணியாற்றிய இவர் பின்னர் பதவி உயர்வு பெற்று சிக்மகளூர் மாவட்ட கண்காணிப்பாளராக ஆனார்.
காவல்துறை அதிகாரி
அதனைத்தொடர்ந்து பெங்களூருவில் காவல் துணை ஆணையராக பணியாற்றிய அண்ணாமலை தனது அதிரடி நடவடிக்கையால் பொது மக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு திடீரென்று 2019ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த இவர் கடந்த ஆண்டு பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து பாஜக நடத்திய வேல் யாத்திரை ஆகியவற்றில் பங்கேற்று களப்பணி செய்தார்.
அரசியல்வாதி
இதனிடையே அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக அக்கட்சியின் தலைமை நியமித்தது. தனது இளம் வயதிலேயே பல முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் இவர் சினிமாவையும் விட்டுவைப்பதாக இல்லை. அண்ணாமலை நடிகராக அறிமுகமாகியிருக்கும் கன்னட படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
நடிகராக அறிமுகம்
ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளை இழந்து பிறகு நீச்சல் கற்றுக்கொண்டு சர்வதேச பாரா நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை புரிந்து வருபவர் விஸ்வாஸ். இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அரபி’ என்ற படத்தை எடுத்துள்ளனர். ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் தான் தமிழ்நாடு பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஸின் நீச்சல் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒரு ரூபாய் சம்பளம்
திரைத்துறையை சாராத, ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவுசெய்து அண்ணாமலையிடம் கதையை கூறியுள்ளனர். இந்தக் கதையால் ஈர்க்கப்பட்ட அவரும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்து கொடுத்துள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.