கல்விதமிழ்நாடு

பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது – அன்புமணி ராமதாஸ்!

ஆண்டுக்கு 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான். ஆனால் அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

அறிக்கை

தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 22,831 தொடக்கப் பள்ளிகளும், 6,587 நடுநிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 29,418 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் 6,9640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டாலும், தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப் பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என்று மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது.

Teachers

கோரிக்கை

கடந்த ஆண்டில் மட்டும் தொடக்கப் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்காக 4,500 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் கூடுதலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த வகையில் மட்டும் சுமார் 11 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும், தொடக்கப்பள்ளிகளிலும், நடுநிலைப்பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுவதை ஈராண்டு திட்டமாக செயல்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் சுமார் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும்.

Recruitment Board

வேலை வழங்க வேண்டும்

இதனால் ஆண்டுக்கு 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இதுவரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 80 ஆயிரம் பேருக்கும், விரைவில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்’ என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts