வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் 1ம் முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் 1ம் முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்பெயரில் திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மேலும், 20 நாட்களுக்குள் புத்தகம், புத்தகப்பை, சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
இந்நிலையில், திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செய்தியாளர் சந்திப்பு
அதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது. எனவே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். வரும் கல்வியாண்டில், 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். 90 சதவீத மாணவர்கள் தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத, மாணவர்கள் சுகாதாரத் துறை மூலமாக உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிரடி அறிவிப்பு
இதனையடுத்து 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் 5 நாட்களுக்கு என்.ஜி.ஓ, காவல்துறை அதிகாரிகள் போன்றவர்கள் சிறப்பு வகுப்பு எடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். மேலும், நீட் தேர்வை பொறுத்தவரை தொடர்ந்து நாம் சட்டபூர்வமாக அழுத்தத்தைக் கொடுத்து வருகிறோம். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செல்போனை மாணவர்கள் வகுப்பறைகளுக்கு கொண்டு வரக்கூடாது. மீறிக் கொண்டு வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும்.’
அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பை கேட்டு பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.