போலீஸ் தடைகளை மீறி விழுப்புரத்தில் ஆட்டோ ரேஸ் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சுழல் நிலவியது.
ஆட்டோ ரேஸ்
விழுப்புரம்: விழுப்புர மாவட்டம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் தொடங்கி, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி அதிகாலை நேரத்தில் சுமார் 18 கி.மீ. தூரத்திற்கு ரேஸ் நடந்துள்ளது. ஏற்கனவே வாகன பந்தயத்துக்கு போலீசார் தடை விதித்திருக்கும் நிலையில் தடையை மீறி இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
10 ஆயிரம் பரிசு
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வியாசர்பாடி பகுதி மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 4 ஆட்டோக்கள் ரேஸ் விடப்பட்டிருக்கிறது. அந்த ஆட்டோ டிரைவர்கள் நெடுஞ்சாலை பகுதிகளில் அதி வேகமாக சென்றிருக்கிறார்கள். மேலும், அவர்களை உற்சாகப்படுத்த அந்த சாலையை சுற்றியும் அவர்களின் நண்பர்கள் கூச்சலிட்டுள்ளர்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த ரேஸ் யார் சிறந்த மெக்கானிக் என்று நிரூபிக்க நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த ரேஸில் முதலில் வந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆட்டோ பறிமுதல்
இந்நிலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ரேஸ் பற்றி தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். அதனையடுத்து ரேஸில் கலந்துக்கொண்ட விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ ஒன்றை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த ஆட்டோ விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
போலீஸ் தகவல்
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் யாரும் பிடிபடவில்லை என்பதால், சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. ரேஸில் ஈடுப்பட்ட நபர்கள் யாரு என்று தெரிந்ததும் செய்தியாளர்களுக்கு தெரிவிப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
ஓரம் போ
இந்நிலையில் 2007ம் ஆண்டு வெளியான ஓரம் போ படத்தில் ஆட்டோ ரேஸ் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்ப்பெற்றிருக்கும். இப்போது அதே போல் திரைப்பட பாணியில் அரங்கேறிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.