மைசூரில் செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மைசூரில் மாவட்டத்தில் ஹன்சூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி தொட்டஹேஜ்ஜூர். இங்கு சுதர்ஷன் மற்றும் நாவ்யா கௌடா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான்கரை வயதில் மகனும், ஆறரை மாத ஆண் கைக்குழந்தையும் உள்ளனர். இவர்கள் வீட்டில் தினசரி பூஜைக்கு பின்னர் செம்பருத்திப் பூவை வாசலில் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
இந்நிலையில், பெரிய பையனுடன் ஆறரை மாத குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வாசிலில் பூஜை செய்து வைத்திருந்த செம்பருத்திப் பூவை குழந்தை கையில் எடுத்து அதனின் பாதியை பிரித்து வாயில் போட்டுள்ளது. இதனைக் கவனித்த குழந்தையின் அண்ணன் அதனை உடனே வெளியே எடுக்க முயற்சி செய்தான், ஆனால் அதற்குள் குழந்தை பூவை விழுங்கிவிட்டது. அந்த பூ தொண்டையில் சிக்கியது. இதனால் குழந்தை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவதி அடைந்தது.
இதனைப் பார்த்து பதறிப்போன பெற்றோர்கள் உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் ஹனகோட்வில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், குழந்தையின் நுரையீரல் பகுதியில் பூ சிக்கிய காரணத்தினால், உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இதனையடுத்து, உடனே மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
ஆறரை மாத குழந்தை செம்பருத்திப் பூவை விழுங்கியதால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை மட்டுமின்றி, அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

