சமூகம் - வாழ்க்கை

நினைவாற்றலை மேம்படுத்தும் மாத்திரைகள் – அவசியமா ? வியாபார யுக்தியா ?

இது தேர்வுக் காலம். மாணவர்களும் பெற்றோர்களும் ஒரு சேர ‘மதிப்பெண்கள்’ என்ற இலக்கில் பயணிக்கிறார்கள். நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஞாபக சக்திக்கான மாத்திரை விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

நமது குழந்தைகளுக்கு இன்னும் ஞாபக சக்தி கூடினால் 100 மதிப்பெண் உறுதி என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். வாங்கித் தருகிறார்கள். இந்த மாத்திரைகளால் ஞாபகசக்தி கூடுமா? எவ்வளவு காலம் பயன்படுத்தினால் ஞாபக சக்தி கூடும்? நீண்ட காலம் பயன்படுத்தினால் ஓரளவு பயன் கிடைக்கலாம்.

நினைவாற்றல் மூளையின் முக்கியச் செயல்பாடு. ஞாபகசக்தி மனித குலம் முழுமைக்கும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தேவையான ஆற்றல் ஆகும்! வயது ஆக ஆக ஞாபகசக்தி குறைகிறது.

வயதானவர்கள் பழங்கால நிகழ்ச்சிகளைச் சொன்னால் ‘அபார ஞாபக சக்தி’ என்கிறோம். நமக்கு நினைவில் நிற்காத ஒன்றை அடுத்தவர் எடுத்துச் சொன்னால், அவரின் நினைவாற்றலுக்காக புகழ்கிறோம்.

நினைவாற்றல் பயிற்சி :

நினைவாற்றல் பயிற்சியால் வளப்படுத்தக்கூடிய ஆற்றல். நினைவு என்பது தேவையைப் பொறுத்தது. மூளை எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளும். ஆனால் அடிக்கடி பயன்படும் தகவல்கள் நினைவில் மேல் அடுக்கில் இருக்கும். பயன்படுத்தாத தகவல்கள் புதைந்து கிடக்கும். தேவைப்படும்போது வெளிவராமல் போகும். இதை ஞாபக மறதி என்கிறோம்.

ஞாபக மறதி ஏற்பட பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது காலம். அண்மை நாள் நிகழ்ச்சிகள் ஞாபகம் இருக்கும். பழங்கால நிகழ்வுகள் ஞாபகம் இருக்காது. இது இயற்கை. அடுத்தது விருப்பமான தகவல்கள் ஞாபகத்தில் நிற்கும்.

கவனகப் பயிற்சியில் நினைவாற்றலை கூர்மைப்படுத்தி நினைவேந்தல்களாக பலர் இருந்துள்ளனர். பயிற்சிக்கும் ஞாபக சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போது யோசிப்போம். மாத்திரையால் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியுமா என்று. பயிற்சிக்குப் பதில் மாத்திரை போதுமா?

மாத்திரை நினைவாற்றலை மேம்படுத்தாது. மரபார்ந்த சித்த மருத்துவத்தில் ஞாபக சக்திக்காக மருந்துகள் இருக்கின்றன. வல்லாரை, பிராமி கொண்டு இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

நோய்க்காக தரப்படும் மருந்து அனைவருக்கும் ஒன்றே போல் பயன் தரலாம். ஆனால், நினைவாற்றல் குறைவு நோயல்ல! எனவே ஞாபக சக்திக்கான மாத்திரைகள் ஒரே விளைவை எல்லோருக்கும் ஏற்படுத்தாது.

நினைவாற்றலின் மூன்றாவது கூறு சூழல். அந்த நேரத்தின் சூழல் நினைவாற்றலைப் பாதிக்கும். எல்லா வினாக்களுக்கும் விடை தெரியும். ஆனால் தேர்வுக் கூடத்தில் சில வினாக்களுக்கு விடை ஞாபகத்துக்கு வராது. ஏன்? தேர்வுக் கூடம், தேர்வு என்ற சூழல்தான் காரணம்.

பயம், பதற்றம், படபடப்பு, அதீத எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகள் நினைவாற்றலைப் பாதிக்கின்றன. கல்விமுறை, தேர்வு ஆகியன நினைவுகூர்தலை மட்டுமே மய்யப்படுத்துகின்றன.

எனவே ‘மனப்பாடம்’ தான் தேவைப்படும் திறன் என்றாகிறது. வேறு வழியில்லாமல் பிள்ளைகளுக்கு மனப்பாட சக்தியை பெற்றோர்கள் அதிகப்படுத்த விரும்புகிறார்கள். அதற்காக மாத்திரை ஏன்?

‘சூழல்’ என்ற கூறில் கவனம் செலுத்தலாம். பிள்ளைகளுக்குப் படிப்பதில் ‘நெருக்கடி’ கொடுக்க வேண்டாம். வீட்டை ‘பள்ளிக்கூடமாக’ மாற்ற வேண்டாம். வீடு, பள்ளிக்கூடம் இரண்டும் வேறு வேறு.

வீடு என்றால் சுதந்திரம், நேரக்கட்டுப்பாடு இல்லாமை கண்காணிப்பு அற்ற நிலை. இந்த உணர்வுகளை பெற்றோர் மதிக்க வேண்டும்.

அப்போதுதான் பிள்ளைகள் மலர்ச்சியுடன் படிப்பார்கள். வீடும் பள்ளிக்கூடம் போலாகிவிட்டால் 24 மணி நேரமும் ‘படிப்பு’ என்ற சுமையில் பிள்ளைகள் நசுங்கிப் போவார்கள்.

தெரிந்தது, தெரிந்ததைப் பயன்படுத்துவது ஆகியவற்றை சோதனை செய்வது தான் நல்ல தேர்வு முறை. ஞாபக சக்தியையும் மதிப்பெண்களையும் கொண்டு பிள்ளைகளை அடிப்பது தேவையற்றது. பெற்றோர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் நல்ல அப்பா, அம்மாவாக இருந்தாலே போதும்.

கெடுபிடி இல்லாத உகந்த சூழலை வீட்டில் உருவாக்கித் தந்தால் பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். ஞாபக சக்திக்கான மாத்திரை சாப்பிட்டு ஆனந்த் உலக சதுரங்க வாகையர் ஆகவில்லை.

அவர் வாகையர் ஆனபிறகுதான் அந்த மாத்திரை விளம்பரத்தில் நடித்தார். உங்கள் பிள்ளைகளுக்கு மாத்திரைகள் வேண்டாம். நீங்கள் ஏற்படுத்தித் தரும் இதமான சூழலே போதும்!

Related posts