அரசியல்தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த விக்கெட் அவுட்! கட்சியை விட்டு விலகும் முக்கிய புள்ளி !

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சரத்பாபு கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம்

தமிழ் சினிமாத்துறையில் கொடி கட்டி பறந்தவர் கமலஹாசன். சினிமாத்துறையில் பல புதுமைகளையும் சாதனைகளையும் செய்த கமலஹாசன், தமிழக அரசியலிலும் பல புதுமைகளையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருகிறேன் எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். அவர் கட்சியில் அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர் கட்சியில் இணைந்தனர்.

2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மக்கள் பெரும் அளவில் தங்கள் ஆதரவை கொடுத்தனர். சில தொகுதிகளில் அ.ம.முக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்தனர் மக்கள் நீதி மய்யம் கட்சி.

படுதோல்வி

அதே நம்பிக்கையோடு 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் களமிறங்கினர். ஆனால் தேர்தலில் கட்சி ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. அந்த தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார் கமல்ஹாசன். கட்சின் முக்கிய வேட்பாளர்களும் படுதோல்வியை அடைந்தனர்.

கட்சி பிளவு

இந்த தேர்தல் தோல்வி மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பிளவுக்கு தொடக்க புள்ளியானது. மக்கள் நீதி மய்யம் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகத் தொடங்கினர். அதிலும் கட்சின் துணைத் தலைவராக இருந்த ஆர்.மகேந்திரன் கட்சியை விட்டு விலகியது மிக பெரிய அதிர்வலையை கிளப்பியது. அதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் அணி செயலாளராக இருந்த பத்மபிரியா கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். மேலும், தலைமை நிலைய பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு உள்ளிட்ட பலர் கட்சியை விட்டு வெளியேறினர்.


கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வேறு கட்சிகளில் தங்களை இணைத்து கொண்டு வருவது கமலுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரத்பாபு கட்சியில் இருந்து விலகல்

மக்கள் நீதி மய்யத்திற்கு அடுத்த அதிர்ச்சியாக கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சரத்பாபு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சரத்பாபு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது பெரும் நம்பிக்கை கொண்டும், கமல்ஹாசன் மீதான நம்பிக்கையோடும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இணைந்து தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வந்தேன். கமலின் கொள்கைகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு 21,139 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தேன். அதன் பின்னர் எனக்கு மாநிலச் செயலர் பொறுப்பு வழங்கினார்.


உள்ளாட்சித் தேர்தலிலும் சிறப்பாக பணியாற்றிமின்றி நல்ல வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தேன். ஆனால் இந்த இரு உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்தது. மேலும், கட்சியில் தலைவரின் ஈடுபாடு வெகுவாகக் குறைந்து விட்டது. தலைவர் வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாக சென்றுவிட்டார். அதனால் தமிழ்நாட்டில் இக்கட்சி எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டு போய் சேர்க்கமுடியாது என்ற நிலை உள்ளதாக நான் எண்ணியதால் கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts