ஃபிட்னஸ்

நுரையீரலை பலப்படுத்தும் அர்த்த சக்ராசனம்!

அர்த்த சக்ராசனத்தில் நிற்கும்போது காலிலிருந்து இடுப்பு வரை அப்படியே நிற்க வேண்டும். இடுப்பிலிருந்து மேல் பகுதி மட்டும் வளைய வேண்டும். இடுப்பிலிருந்து மேல் உடல் மட்டும் வளையும் போது உடம்பின் நேர்க்கோட்டு பகுதி இழுக்கப்படுகிறது.

அதன் மூலம், பிறப்புறுப்புக்குக் கீழ் துவங்கி உச்சந்தலை வரை இழுக்கப்படுவதால் (இதை சக்ராசனத்தில் இன்னும் கூடுதலாக உணர முடியும்) நேர்க் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பிகள் (ductless glands) அழுந்தப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் செழுமையடைகின்றன.

சக்ராசனத்திலும், அர்த்த சக்ராசனத்திலும் கிடைக்கக் கூடிய முக்கிய நன்மை இதுவாகும். இதன் மூலம் உயிர் வளர்க்கக்கூடிய சுரப்பிகள் தேவைக்கு சரியாகவும் நிறைவாகவும் சுரக்கின்றன.

அர்த்த சக்ராசனத்தின் மேலும் சில பலன்கள் :

மேற்கூறப்பட்டுள்ள நன்மைகளோடு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகளும் அர்த்த சக்ராசனம் பயில்வதால் உண்டாகும்.

நுரையீரல்களை பலப்படுத்துகிறது.

இருதய இயக்கத்தை முன்னேற்றுகிறது.

சீரண கோளாறுகளை சரி செய்கிறது.

முதுகு வலியை போக்கவும், முதுகின் வளையும் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.

இடுப்பிலுள்ள அதிக சதையை குறைக்கிறது.

மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

செய்முறை :

கால்கள் இரண்டையும் அருகருகே வைத்து விரிப்பில் நிற்கவும்.

கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். அதாவது, கட்டை விரல் முதுகுக்கு பின்னாலும், மீதி நான்கு விரல்களும் முன்னால் இருக்குமாறு இடுப்பை பிடித்துக் கொள்ளவும்.

மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே இடுப்பிலிருந்து பின்னால் வளையவும்.

 

20 வினாடிகள் சாதாரண மூச்சில் இந்த நிலையில் இருக்கவும். பின் மூச்சை விட்டுக் கொண்டே நிமிர்ந்து கைகளை தளர்த்தவும்.

குறிப்பு :

அல்சர், உயர் இரத்த அழுத்தம், குடலிறக்கம், கழுத்து, முதுகு மற்றும் இடுப்பில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

Related posts