அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது கடைக்கோடி தொண்டனின் விருப்பம். இந்த விவகாரத்தில் நான் கூறியது சிதம்பர ரகசியம் அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை சூடுப்பிடித்துள்ளது. சமீபத்தில் இந்த சர்ச்சை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்த்தார். அதில், ‘ஒற்றைத் தலைமை சர்ச்சை ஏன் உருவாக்கப்பட்டது என்று எனக்கே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை குறித்து பேட்டி அளித்ததால் இந்த பிரச்சனை பூதாகரமாகியுள்ளது’ என்று கூறியிருந்தார். இதனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானத்திற்காக அமைக்கப்பட்ட தீர்மானக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஜெயக்குமார் உட்பட 12 உறுபினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெயக்குமார் பதில்
அப்போது அவர் கூறுகையில், ‘திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டு முடிவடைந்துள்ளது. இதில் அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கு குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஒற்றைத் தலைமை பற்றி நான் பேசியதில் தவறு ஏதுமில்லை. வெளிப்படைத் தன்மையோடுதான் பேசியிருந்தேன். ஒற்றை தலைமை வேண்டும் என்பது கடைக்கோடி தொண்டனின் விருப்பம். இது ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஈபிஎஸ்
இதனையடுத்து தீர்மானக் குழு கூட்டத்தில் ஈபிஎஸ் கலந்து கொள்ளாதது பற்றி ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தீர்மானக் குழு கூட்டம் என்பது குழு உறுப்பினர்கள் 12 பேரை உள்ளடக்கியது. அதில் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் பங்கேற்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று தெரிவித்தார்.