சென்னையில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி விபரீத முடிவு.
சென்னை தாம்பரம்
தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் , அமுதா தம்பதியின் மகள் மேகலா(22). சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது வேலைக்கு செல்லும் வழியில் சாலிகிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. யுவராஜ் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். மேகலா மற்றும் யுவராஜ் இருவரும் நட்பாக பழகி பின்னர் காதலாக மாறியுள்ளது.

காதல் திருமணம்
இருவரின் காதல் விவகாரம் குறித்து மேகலாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து மேகாலாவிற்க்கு வேறு இடத்தில் திருமணம் செய்யலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி மேகலா யுவராஜை திருமணம் செய்துகொண்டு சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்தனர்.
கணவர் மதுவிற்கு அடிமை
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகுதான் யுவராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று மேகலாவிற்கு தெரியவந்துள்ளது, இதனால் தினமும் இருவரின் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு யுவராஜ் அடித்ததாக கூறி மேகலா பெருங்களத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

துக்கிட்டு தற்கொலை
இதன் காரணமாக மேகலா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படுக்கை அறைக்குச் சென்ற மேகலா வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெருங்களத்தூர் போலீசார் மேகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் எட்டு மாதத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

