குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதிகேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
குட்கா ஊழல் வழக்கு
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த ஊழல் வழக்கில் குட்கா வியாபாரி தொழிலதிபர் மாதவராவ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 6 நபர்களை சிபிஐ போலீசார் கைது செய்தனர். அவர்கள் 6 பேர் மீதும் முதல் கட்டமாக சிபிஐ போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா மற்றும் சென்னை முன்னாள் காவல் ஆணையர்களான டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.