கலைஞர் கருணாநிதி தான் எனக்கு ‘இசைஞானி’ என்று பெயர் வைத்தார் என கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா புகழ்ந்துள்ளார்.
பிறந்த நாள் நிகழ்ச்சி
கோவையில் தனியார் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இளையராஜா தனது பழைய நினைவுகளை மக்களிடையே பகிர்ந்து கொண்டார். அப்போது இளையராஜா, ‘எனது தந்தை எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன். தன்னை பள்ளியில் சேர்க்கும்போது ‘ராசையா’ என கூப்பிடுவதற்கு எளிதாக இருக்கும் என்று ராசையா என தந்தை பதிவு செய்தார். விஷன் மியூசிக் மாஸ்டர் ‘ராஜா’ என்று மாற்றினார். பட வாய்ப்பு கிடைத்த பின்பு பஞ்சு அருணாசலம் என்ன பெயர் போடலாம் என கேட்டார். அப்போது பாவலர் பிரதர்ஸ் என்று சொன்னபோது அது பழைய பெயர் இருக்கு என்று ‘இளையராஜா’ என மாற்றி படங்களில் பதிவிட்டார்.
பழைய நினைவுகள்
என் பெயர் நான் வைத்ததில்லை. ‘சிவன் தனக்கு சிவன் என்று பெயர் வைத்துக்கொண்டாரா, நாம் தான் சிவன் என்று அழைத்து வருகிறோம்’. ஆனால் எங்க அப்பா வைத்த ஞானதேசிகன் என்ற பெயரை கலைஞர் கருணாநிதி எப்படி கண்டு பிடித்தாரோ அதனை இசையுடன் சேர்த்து ஒரு பெரிய கூட்டத்தில் ‘இசைஞானி’ என்ற படத்தை கூறி அழைத்தார் என கூறினார்.
மேலும் இதை எப்படி எடுத்துக்கொள்வது ? என் தந்தை வைத்த பெயர் எப்படி கலைஞருக்கு தெரியும். அந்த உணர்வை தெரிந்து கொள்வதுதான் ஒரு தலைவருடைய சிறப்பு. கலைஞரின் வழியில் நம்முடைய முதல்வர் மு.க. ஸ்டாலின் நாட்டை வழிநடத்தி வருகிறார். அவர் இந்த நாட்டிற்கு செய்தது அனைத்தும் எனக்கு செய்தது என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.
கலைஞரின் ஆட்சி
எனக்கென்று யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன், யாரிடமும் போய் நின்றதில்லை என தெரிவித்தார். கலைஞர் ஐயாவிடம் எனக்கு அவ்வளவு மரியாதையை, ‘இசைஞானி’ என்ற பட்டத்தை கொடுத்தார் என்பதற்காக இல்லை.
தனிப்பட்ட முறையில் மக்களை முன்னேற்ற பட்டபாடு அரசியலில் வட்டாரத்தில் நன்றாக தெரியும். பொதுவாழ்வில் அவர் செய்த நல்ல காரியங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் வழியில் சென்று கொண்டிருக்கும் நம்முடைய முதல்வர் கலைஞரின் நீண்ட கனவுகளை நிறைவேற்றி வைப்பார் என்ற முழு நம்பிக்கை உள்ளது’ என்று இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.