இந்தியா மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தகைசால் தமிழர் விருது
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற மு.க. ஸ்டலின் தலைமையிலான திமுக அரசு, நாட்டின் வளர்ச்சிக்கு தொண்டாற்றிய மூத்த தலைவர்களைக் கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பாக தகைசால் தமிழர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருதுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக விளங்கும் 96 வயதான நல்லகண்ணு, 1925ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தலைவராக இருந்திருக்கிறார். இந்த வேளையில் தகைசால் தமிழர் விருதுக்கு தமிழ்நாடு அரசால் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டிருப்பது, அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

