தமிழ்நாடு

சாதி சான்றிதழில் No Caste ! சாதிசாராதவர் பிரிவினை சேர்க்க வேண்டும்!

கோவையை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு எந்த சாதியையும் மதத்தையும் சாராதவர் என்னும் சான்றிதழை பெற்றுள்ளார்.

சாதி சான்றிதழ்

குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களை கல்வியில் சேர்க்க, உதவித்தொகை பெற, வேலைவாய்ப்பிற்கு என முதலிய எல்லாவற்றிற்கும் முக்கிய ஆவணங்களாக சாதி சான்றிதழும் கேட்கப்படும். சாதி சான்றிதழ் தாய் (அ) தந்தை வழி சாதியை வைத்து வருவாய் துறையினரால் சாதி சான்றிதழ் வழங்கப்படும். சிலர் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகவே சாதி சான்றிதழை வாங்கி விடுவர்.

விண்ணப்பம்

இந்நிலையில், கோயம்புத்தூரை சேர்ந்த வடிவமைப்பு நிறுவனத்தை நடத்திவரும் தொழிலதிபர் நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மூன்றரை வயது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளியில் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்ப தாளில் சாதியை நிரப்பாமல் காலியாக விட்டதால் விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நரேஷ் கார்த்திக் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் தனது மகள் எந்த சாதியையோ, மதத்தையோ சேர்ந்தவர் அல்ல என சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

தமிழக அரசு அரசாணை

நரேஷ் கார்த்திக்கின் விண்ணப்பத்தை அடுத்து அவரது மகள் ஜி. என்.வில்மா எந்த சாதியையும், மதத்தையும் சார்ந்தவர் அல்ல என சான்று வழங்கப்பட்டது. இதுகுறித்து,  பேசிய நரேஷ் கார்த்திக், ‘மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கு விண்ணப்பத்தில் சாதி குறிப்பிட தேவையில்லை என 1973ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனாலும்,  பள்ளிகளில் பல்வேறு காரணங்களுக்காக சாதி சான்றிகழ் கேட்கின்றனர்.

No Caste

சாதி மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வு ஒழியும். கோவை அலுவலகத்தில் முதன் முதலாக எந்த சாதி மதத்தையும் சாராதவர் என்ற சான்று வழங்கப்பட்டுள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கும் போது MBC, BC, OC, SC, ST  ஆகிய பிரிவுகளை குறிப்பிடுகின்றனர். அதில் NC எனப்படும் No Caste என்ற பிரிவை சான்றிதழில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதி, மதம் சாராதவர் என விண்ணப்பிக்க எளிதாக இருக்கும்’ என கூறினார்.

சாதி, மதத்தை சாராதவர் என்ற சான்றிதழை பெற்ற இந்த சம்பவம் தேசிய அளவில் பேசப்படுகிறது.

Related posts