சில சமயங்களில் மதிய உணவை முடித்தவுடன் இனிப்பு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம், உடனே எதாவது இனிப்பை உட்கொள்வோம். இது எதனால் ஏற்படுகிறது? இதன் விளைவுகள் என்ன? என்பதை பற்றி இதில் காண்போம்.
உணவு உண்ட பிறகு நம்முடைய உடலின் மிக முக்கிய செயல்பாடு என்றால் அது செரிமானம் தான். நாம் உண்ட உணவு முழுக்க ஜீரணமடைய வேண்டுமானால், அதற்கும் உடலில் நிறைய ஆற்றல்கள் தேவைப்படுகின்றன. இதைப் பெறுவதற்கு உடனடி சக்தி தேவைப்படுகிறது.
இந்த உடனடி சக்தியை சர்க்கரையின் மூலம் நம்மால் பெற முடியும். அதனால் தான் ஹெவி மீல்ஸ் சாப்பிட்டு முடித்ததும் நம்முடைய நாக்கு இனிப்பை தேடுகிறது. உணவுக்குப் பிறகு நம்முடைய உடலின் ரத்த சர்க்கரை அளவில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். இந்த சமச்சீரற்ற ரத்த சர்க்கரை அளவு, இனிப்பு அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற பசியைத் தூண்டும்.
நீரிழிவு நோய் ஏற்பட காரணம்
நாம் இனிப்பு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும், உணவு சமச்சீராக இல்லாமல் போனாலும், அதிக கார்போ ஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டாலும் அது ரத்த சர்க்கரை அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். உணவுக்குப் பிறகு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு உயரும். குளுக்கோஸ் அளவுகளின் இந்த ஏற்றத்தாழ்வுக்கு நம்முடைய உடல் ஒத்துழைக்காது.
சர்க்கரை என்பது ஊட்டச்சத்து மதிப்பில்லாத வெற்று கலோரிகளின் கலவையாகும். நாம் உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடாததால் கொழுப்புச் செல்கள் குவிந்து உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடுகிறது.
எடுத்தவுடனேயே சர்க்கரையை முற்றிலுமாகக் குறைக்க முடியாது. சாப்பிட்ட பிறகு இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பது இயல்பு தான். அதற்கு அதிகமாக வருத்தப்படத் தேவையில்லை. நம்முடைய உணவு முறைகளில் சில மாற்றங்களைச் செய்தாலே எளிதில் சர்க்கரை நோய் ஏற்படுவதை குறைத்து விட முடியும்.
உணவை சத்தானதாக மாற்றுங்கள். செயற்கை இனிப்பு மற்றும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக உலர் பழங்கள், ஃப்ரஷ்ஷான பழங்கள் போன்ற இயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.