ஆன்மீகம்

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ! – தில்லை நடராஜர் ஆலயம் – கழுகு பார்வை

நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில்என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன்பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம்தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனக சபை எனக் கூறப்படுகிறது.

சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை. பெரியகோவில் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.

கோவில் வடிவமைப்பு :

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும் மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது.

விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கக் தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது.

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

திருமந்திரத்தில் “திருமூலர்” மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது “மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.

“பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகள் “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது.

“கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது.

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது, இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு பிரபஞ்ச நாயகனாம் சிவபெருமானின் அருளைப் பெறுவோம்.

Related posts