சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘தெலுங்கானா முதலமைச்சர் சொன்னால் கையெழுத்து போடுவதற்கு நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது’ என ஆவேசமாக பேசியுள்ளார்.தெலுங்கானா மாநில ஆளுநராக இரண்டு ஆண்டுகள் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக ஓராண்டில் செய்துள்ள பணிகள் குறித்த புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் புத்தகத்தை வெளியிட, அவருடைய கணவர் டாக்டர் சௌந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
“நான் அதிகாரத்தை பயன்படுத்துவதாக ஒரு சிலர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். நான் அன்பை மட்டுமே பயன்படுத்துகிறேன். இன்றைய கால கட்டத்தில் ஜனநாயகம் தேவை. தமிழகத்தில் தமிழ் பெண்ணாக வலம் வந்து ஆளுநராக பணியாற்றி வருகிறேன். அடிப்படையில் எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நான். எப்போதும் மக்களோடு மக்களாக, குடிமக்களின் மனதில் தான் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
தெலுங்கானா மாநில முதலமைச்சருடன் பணிபுரிவது சவாலாகத் தான் உள்ளது. ஆனால் ஆளுநராக எனது பணியை சரியாக நான் செய்து வருகிறேன். தெலுங்கானா மாநிலத்தில் வலிமையான ஒருவரை ஆளுநராக நியமிக்க இருப்பதாக வதந்திகள் பரப்புகிறார்கள். பெண் என்றால் வலிமை இல்லையா? பெண்ணாக எனக்கு இருக்கும் வலிமை வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.
தெலுங்கானாவிற்கு முழு நேர ஆளுநர் வேண்டுமென விமர்சிக்கிறார்கள். பகுதி நேர ஆளுநராக நான் செய்த பணிகள் அதிகம். முதலமைச்சரின் ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக விமர்சனங்கள் வைக்கிறார்கள். ஆனால், என் பணி குறித்து புதுச்சேரி முதலமைச்சர் பாராட்டு தெரிவிக்கிறார். அதே சமயம் தெலுங்கானா மாநில முதலமைச்சரோ என் பணிகள் மீது விமர்சனங்களை அடுக்குகிறார்.
ஆளுநரும், முதலமைச்சரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்பதற்கு புதுச்சேரி ஒரு சிறந்த உதாரணம். அதே சமயம் ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமான மோதல் போக்கால் மாநிலத்தின் வளர்ச்சி குறையும் என்பதற்கு தெலுங்கானா மற்றொரு உதாரணம். தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சொன்னால் கையெழுத்து போடுவதற்கு நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது. சும்மா டெல்லி சென்றால், அதற்குள் என்னை இடமாறுதல் செய்யப் போவதாக சொல்கிறார்கள். அரசியல்வாதியாக இருந்த போதும் விமர்சனம் வருகிறது. ஆளுநராக இருக்கும் போதும் விமர்சனம் வருகிறது” என்று கூறினார்.