நெல்சனுக்கு தளபதி அப்பா சொன்ன அறிவுரை!
தளபதி விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பீஸ்ட் படம் பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
இயக்குனர் நெல்சன்
விஜய் டி.வி. யின் பிரபல நிகழ்ச்சிகளான கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் இயக்குனராக இருந்தவர் நெல்சன். பிறகு, லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் தான் முதல்முறையாக யோகிபாபு ஹீரோவாக நடித்தார். நயன்தாரா, யோகிபாபு காம்பினேஷனை கேட்ட மொத்த கோலிவுட்டும் படத்தை சற்று மலிவாகவே எடை போட்டனர்.
ஆனால் திரைக்கு வந்த கோலமாவு கோகிலா மக்களிடையே மிகப் பெரிய பாராட்டை பெற்றது. அதிலும் டார்க் காமெடி வகையான படங்கள் எடுப்பதில் நெல்சன் தான் பெஸ்ட் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேச தொடங்கினர்.

அதை நிரூபிக்கும் வகையில் சிவகார்திகேயனோடு இணைந்த டாக்டர் படமும் நெல்சனுக்கு செம ஹிட் கொடுத்தது. கொரோனாவிற்கு பிறகு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. டாக்டர் படம் நெல்சனை பற்றி மீண்டும் மக்களிடையே பேச வைத்தது.
பீஸ்ட்
டாக்டர் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்தார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்புகள் மக்களிடமும், ரசிகர்களிடம் கிளம்பியது. கடந்த 13ம் தேதி பீஸ்ட் படம் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்புகளை எந்த வகையிலும் பீஸ்ட் படம்
பூர்த்தி செய்யவில்லை. மாறாக நெல்சன் மேல் பல எதிர்மறையான கருத்துகளும் விமர்சனங்களும் வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 169யில் நெல்சன் தான் இயக்குனர் என்ற அறிவிப்பு பீஸ்ட் பட ரிலீஸ்க்கு முன்னதாக வந்தது.
ஆனால், பீஸ்ட் படம் பார்த்து விட்டு ரஜினிகாந்த் சந்தோசப்படவில்லை என்று சில தகவல் கசியவே, தலைவர் 169யில் நெல்சன் தான் இயக்குனரா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பேச தொடங்கியுள்ளனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரை
பீஸ்ட் படம் பார்த்துவிட்டு விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், “பீஸ்ட் படத்தை அரபிக் குத்து பாடல் வரைக்கும் தான் உற்சாகமாக பார்க்க முடிகிறது. திரைக்கதையும், இயக்கிய விதமும் தரமாக இல்லை என்று கூறியுள்ளார். இளைய தலைமுறை இயக்குனர்கள் சில நல்ல படங்கள் மூலம் பெரிய நடிகர்களை இயக்கம் வாய்ப்பை பெறுகின்றனர்.

ஆனால், பெரிய நடிகர்களை இயக்கும் போது தங்களின் திறமைகளை ஓரம் வைத்து விட்டு, வெறும் ஹீரோவின் மாஸ் -சில் மட்டும் படம் வெற்றியடைந்து விடும் என்று நம்புவது மிக பெரிய தவறு, அதை தான் நெல்சன் பீஸ்ட்டிலும் செய்து இருக்கிறார்” என்றார்.
மேலும் “இயக்குனர்கள் தங்கள் பாணியில் படங்களை இயக்க வேண்டும். நெல்சன் இந்த படத்திற்கு சரியான ஹோம் ஒர்க் செய்யாமலும் கதையில் வரும் ராணுவ அமைப்பை பற்றி சரியான புரிதல் இல்லாமலும் இந்த படத்தை இயக்கியுள்ளார்” என்று இயக்குனர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

