விளையாட்டு

பஞ்சாப் அணியை பந்தாடிய டெல்லி – 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சராகியப் பஞ்சாப்

பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் தவான் களம் இறங்கிய நிலையில், தவான் 4 ரன்னிற்கு தன் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 24 ரன்னிலும்,‌ அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 32 ரன்னிலும் வெளியேறினர். அடுத்தடுத்து வந்த பேஸ்ட்மேன்கள், டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, விக்கெட்டை பறிகொடுத்தனர்.இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சில் மிரட்டிய டெல்லி அணியில், கலீல் அகமது, லலித் யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதிரடி காட்டிய டெல்லி

எளிய இலக்கைத் துரத்திய டெல்லி அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினார்கள். இருவரும் சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு வலுவான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா 41 ரன்னில் வெளியேறினார். பின்பு ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் சர்பராஸ் கான் அணியை வெற்றிக் கனியை சுவைக்க வைத்தனர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பறக்க விட்ட வார்னர் 60 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Related posts