ஒவ்வொரு உயிரினத்திலும் அமைந்துள்ள இயல்புகளை, எடுத்துக்காட்டாக பழங்களின் சுவை, பூக்களின் மணம், மனிதனின் முகச்சாயல் போன்ற அம்சங்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (கடத்துவது) கொண்டு செல்வதற்கு அடிப்படையாக இருப்பவை ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள்.
ஓர் உயிரிலிருந்து மரபணுக்களைப் பிரித்து வேறு ஒரு உயிருக்குச் செலுத்தி அந்த உயிருக்கு புதிய குணாதிசயங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்.
மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் இன்னும் தொடக்க நிலையில் தான் இருக்கிறது. “மரபணு மாற்று உணவு வகைகள் பாதுகாப்பானவையா?” என்று கண்டறிய வேண்டும் என்று ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
பேசில்லஸ் துரிஞ்செனிசஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு வகை பாக்டீரியா. இதன் துணை வகையான குர்ஸ்டகி என்ற பாக்டீரியா உருவாக்கும் நச்சுப் பொருட்கள் நெல்லுக்குப் பகையான தண்டு துளைப்பான் மற்றும் இலைச் சுருட்டுப் புழு ஆகியவற்றை அழிக்கக் கூடியவை.
எனவே மேற்கூறிய பாக்டீரியாவிலிருந்து மரபீனியைப் (மரபணுக்களை) பிரித்து நெல்விதைக்குள் செலுத்துவன் மூலம் உருவாகும் புதிய நெற்பயிர் இலைச்சுருட்டுப்புழு, மற்றும் தண்டுத் துளைப்பான் புழுக்களைக் கொன்றுவிடும். இப்படிப்பட்ட நெல்வகைதான் பி.டி. நெல்.
மேற்குறிப்பிட்ட நெல் பயிரில் இருக்கும் நச்சுப்பொருள் இலையிலோ அல்லது தண்டில் மட்டுமேதான் தங்கும் என்பதற்கில்லை. அரிசியிலும் பரவி நிற்கும் ஆபத்து உண்டு.
இதை உண்ணும் மனிதனுக்கு இந்த உணவு நச்சு உணவாக மாறும் அபாயம் உண்டு. இதனால் மனிதர்களுக்கு பலவகையான ஒவ்வாமை நோய்கள் தோன்றும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பிடி பருத்தி இலைகளைத் தின்ற நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒவ்வாமை நோயினால் இறந்ததை ஆந்திர அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மன்சாட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலும் இந்த மரபணு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது.
ஆடுகளைப் போல மனிதர்களும் பலியாகாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியிருக்கிறது.
வேளாண்மையையும், அறியா விவசாயிகளையும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலிலிருந்து விழிப்படையச் செய்வதன் மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளைத் தவிர்ப்போம். தரமான உணவுப் பொருட்களைப் பெறுவது நமது உரிமை, அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது நமது கடமை.