ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் மற்றும் திரையில் தோன்றும் பெண்கள் நிகழ்ச்சியின் ஒளிபரப்பின்போது முகத்தை மறைத்திருக்க வேண்டுமென தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தாலிபான் ஆட்சி
20 வருடங்களுக்கு பிறகு 15 ஆகஸ்ட் 2021 அன்று தாலிபான்கள் காபூலை கைப்பற்றி ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்து அதிகாரத்தை கைப்பற்றினர். தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது மற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
ஏகாதிபத்திய ஆட்சி
தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். மேலும் ஆப்கானில் தலிபான் ஆட்சியை அடுத்து அந்தநாட்டின் பொருளாதாரமும் மோசமாகி வருவதாக கூறப்படுகிறது. தலிபான்களின் ஆட்சியால் மற்ற உலக நாடுகள் அந்த நாட்டின் தூதரக உறவையும், உதவிகளையும் நிறுத்திக்கொண்டன.
கடுமையான கட்டுப்பாடுகள்
ஆப்கானிஸ்தானில் ஆண்கள் குறிப்பாக மாணவர்கள் முடி வெட்டக்கூடாது, தாடி வைக்காத ஆண்கள் அந்த நாட்டு அரசு பணிகளில் நீட்டிக்க முடியாது, மாணவிகள் வகுப்பறையில் பர்தா அணிய வேண்டும், திருமணங்களில் இசை நிகழ்ச்சிக்கு தடை, தலிபான்களின் விதிகளை மீறுபவர்களுக்கு தலை துண்டிப்பு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வகுப்பறை முதலிய கடுமையான பல உத்தரவுகளை தலிபான் விதித்தது.
தொடரும் பெண்களுக்கான விதிகள்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான மேல்நிலை பள்ளிகள் மூடப்பட்டன. ஆண் பாதுகாவலர் இல்லாமல் பெண்கள் பொது இடங்களுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும், இல்லையென்றால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என பெண்களுக்கென பலவித கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாகி வரும் இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் தோன்றும் பெண்கள் முகத்தை மறைத்திருக்க வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.