கடந்த 2 ஆண்டுகளாக பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்று அசத்திய இளைஞர்.
விலை உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வரலாறு காணாத அளவுக்கு விலையேற்றத்தை சந்தித்து உள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் தான் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களும் நிர்ணயம் செய்து வருகிறது.
விலை மாற்றம்
சந்தையின் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் மதிப்பு அதிகரித்தால் பெட்ரோல், டீசல் விலை ஒரு மாதத்திற்கு முன்பு வரை நாள்தோறும் அதிரடியாக உயர்ந்தது. இதனையடுத்து 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்த விலை, கடந்த 45 நாளாக சென்னையில் ஒரே விலையில் நீடித்து வந்தது. இதனால் கடந்த சனிக்கிழமை வரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85-க்கும், டீசல் ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
வரி குறைப்பு
இந்நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைந்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அசத்தும் இளைஞர்
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஆண்டவர் ஆண்கள் கலை கல்லூரியில் வேதியியல் பிரிவில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வாகன பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். மேலும், தற்போது மாணவர் கார்த்திக் அந்த ஆய்வில் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு கிலோ அளவிலான பிளாஸ்டிக் கவர்களை எரிப்பதன் மூலம் 300 மில்லி லிட்டர் பெட்ரோல் கிடைக்கும் மற்றும் ஒரு லிட்டருக்கு 58 கிலோமிட்டர் வரை வாகனம் இயங்கும் என்று கார்த்திக் தெரிவித்தார். இதனால் இன்ஞ்சினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.