உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலின் விண்ணப்பங்களில் அதிமுக கட்சித் தலைவர்கள் கையெழுத்திடாமல் இருப்பதால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 436 கிராம ஊராட்சி உறுப்பினர் என்று மொத்தம் 510 காலியிடங்களுக்கு இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய கடந்த 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது.
வேட்புமனு
நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் போன்ற 34 பதவிகளுக்கு கட்சிகள் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சியின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய சம்மந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் A, B என்ற படிவங்களில் கையெழுத்திட்டு தங்களின் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும்.
அதிமுக சர்ச்சை
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு கட்சி இயங்கி வருகிறது. இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை வலுத்துள்ளது. இதனால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஓ.பன்னீர் செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கவும் அதிமுகவில் முயற்சிகள் நடந்து வருகிறது.
இரட்டை இலை சின்னம்
இதனால் அதிமுகவில், அந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் என்பதால் அதற்குள்ளாக கட்சித் தலைமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று தெரிகிறது.