அதிமுக எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் இபிஎஸ் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கொரோனா பரவல்
இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடக்ககாலத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒற்றை தலைமை
மேலும், தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக தலைமை பொறுப்பை யார் கைப்பற்றப்போவது என்ற போட்டி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதி பொதுக்குழுவில் எந்தவிதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடத்தப்படும் என தாற்காலிக அவைத்தலைவர் அறிவித்தார். இதனால் பொதுக்குழு நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.
மனைவிக்கு கொரோனா தொற்று
ஆலோசனை செய்துவரும் வேளையில் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு லேசான தொற்று இருப்பதால் அவர் தன்னை சேலத்தில் உள்ள வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார். அவரை அண்மையில் சந்தித்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இன்று மதியம் அவரை சந்திக்க வந்த கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று வருகை தந்த நிலையில் அவர்கள் உடனடியாக திரும்பியும் சென்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர்கள் இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.