உண்மையான எதிர்க்கட்சி வேலையை பாமக மட்டுமே செய்து வருகிறது என்று பாஜகவை தொடர்ந்து தற்போது அன்புமணி ராமதாஸும் தெரிவித்துள்ளார்.
கருத்து மோதல்
தி.மு.க ஆளுங்கட்சியாகிவிட்ட நிலையில் தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தில் பிரதானமாக அமர்ந்திருப்பது அ.தி.மு.க தான். ஆனால் சமீபத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார். அதனை மறுத்த அதிமுக, பாஜக தன்னை வளர்த்து கொள்ள மாயை பிரச்சாரம் செய்கிறது என்று விமர்சித்தது. இந்த கருத்து மோதலில் தற்போது பா.ம.கவும் இணைந்துள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் பா.ம.க. கொடியேற்று விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஜூன் 17ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. கர்நாடகா அரசு அவர்களுக்கு அனுப்பி வைத்த மேகதாது அணை சம்பந்தமான திட்ட அறிக்கையை விவாதிக்க இக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது.
மேலும், அடுத்த தலைமுறையை சீரழிக்கும் 3 பெரிய பிரச்சனைகள் மது, போதை பழக்கம், ஆன்லைன் சூதாட்டம். பார் நடத்துவது என்பது சட்டவிரோதமானது. திமுக தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்களித்தது. அதன்படி கடைகளை மூடவேண்டும்’.
பாஜக சிறிய கட்சி
இதனிடையே பாஜக தான் தமிழகத்தில் எதிர்கட்சியாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறியதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், ‘2026ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். தற்போது ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், மக்கள் சார்ந்த பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு காரணமாக திகழ்கிறது. இதனால் உண்மையான எதிர்க்கட்சிக்கான வேலைகளை பாமக தான் தொடர்ந்து செய்து வருகிறது.
அ.தி.மு.க வெறும் எண்ணிக்கை ரீதியில் மட்டுமே எதிர்க்கட்சி இருக்கிறது. மேலும், பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜக சிறிய கட்சி தான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்’.