சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர்
திருவள்ளூர் மாவட்டம் அமலாதியை சேர்ந்த ராஜசேகர்(30). இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றின் விசாரணைகாக போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றுள்னர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
வழக்குகள்
மரணமடைந்த ராஜசேகர் மீது சோழவரம் காவல்நிலையத்தில் 8 வழக்குகளும், வியாசர்பாடி காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், எம்.கே.பி நகர் கவல் நிலையத்தில் 2 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் உள்ளது. ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள் விசாரணை
விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்ததை தொடர்ந்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போலீசார்கள் யார் யார் ? ராஜசேகரை பிடித்தவர்கள் யார் ? இரவு காவல் நிலையத்தில் இருந்த போலீசார்கள் யார் யார் ? என பல கோணங்களில் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணியிடை நீக்கம்
இந்நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே விசாரணை கைதி ராஜசேகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மீண்டும் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.