ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
குருதி கொடையாளர் தினம்
உலக குருதி கொடையாளர் தினம் ஜூன் 14 அனுசரிக்கப்பட்டு வருகிறது. ABO என்ற ரத்த பிரிவை கண்டறிந்த கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) என்பவரின் பிறந்த நாளே உலக குருதி கொடையாளர் தினமாக அனுசரித்து வருகிறோம். தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக குருதி கொடையாளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவத்துறை இயக்குனர் செல்வா விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
குருதி கொடையாளர்கள்
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், ‘கொரோனாவுக்கு முன்பு தமிழ்நாட்டில் தான் அதிக குருதி கொடையாளர்கள் இருந்தார்கள். கொரோனா காலத்தில் ரத்த தானம் குறைந்தது. நான் 60 முதல் 65 முறை ரத்த தானம் செய்து இருக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹரிசன் என்பவர் 1,174 முறை ரத்த தானம் செய்து 2.5 மில்லியன் குழந்தைகள் உயிரை காப்பாற்றியுள்ளார். தமிழநாட்டில் அதிகப்படியாக ராஜசேகர் என்பவர் 195 முறை ரத்த தானம் செய்துள்ளார்.
அண்ணாமலை மீது நடவடிக்கை
அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளரை சந்தித்தார். அமைச்சர் பேசுகையில், ‘பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மாவு குறித்து குற்றச்சாட்டு வைத்திருந்தார். தற்போது ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. பைனான்சியல்-பிட் (financial bid) திறக்கப்பட்டு L1 யார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் L1 ஆக வந்துள்ளது. அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ் கோட் என்ற நிறுவனம் L2 வாக வந்துள்ளது. எனவே அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை.
முறையான டெண்டர்
விதிகளுக்கு உட்பட்டு, மற்றொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெட்டகத்தின் விலை 2018 டெண்டரில் 1996.41 ஆகும். தற்போது 2180.71 ரூபாய் என்பது டெண்டரில் வந்த குறைந்தபட்ச விலையாகும்.
அதிக வருவாய்
பெட்டகத்தின் ஒட்டுமொத்த விலை 9.6% அதிகரித்துள்ளது. கடந்த முறைக்கும் தற்போதும் 150 ரூபாய் வித்தியாசம் உள்ளது. எனினும் கூட அந்த நிறுவனத்தினிடம் பேசி விலை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், ஒரு ஆண்டில் 11 லட்சம் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டு ஐந்து பேர் டெண்டரில் பங்கேற்றுள்ளனர். ராமச்சந்திரன் என்ற ஒப்பந்ததாரருக்கு கிடைக்க வேண்டும் என்றுதான் பாஜக அண்ணாமலை இதை செய்கிறார். அந்த நிறுவனம் டெக்னிக்கல் பெட் (technical bid) தகுதியாகவில்லை’ என்று விளக்கம் அளித்தார். எனவே அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.