சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சித்த மருத்துவர்
சென்னை தி.நகரில் உள்ள ராகவைய்யா தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் மலர்கொடி. 2002-ம் ஆண்டு மே 21-ம் தேதி வீட்டில் இருக்கும்போது நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். மேலும், அவரது வீட்டில் 5 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது. இது குறித்து மலர்கொடியின் சகோதரர் ஆனந்தகுமார் என்பவர், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
முகமூடி கொள்ளை
அந்த புகாரில், ‘முகமூடி அணிந்த மூவர் தன்னையும் தனது தங்கையையும் நாற்காலியில் கட்டிப்போட்டு தனது தங்கையை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்கையடித்து சென்று விட்டார்கள்’ என்று அவர் குறிப்பிடிருந்தார். அதன்பெயரில் போலீசார் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பணியாளர்களால் விபரீதம்
தனியாக வசித்து வரும் சித்த மருத்துவர் மலர்கொடியிடம் அதிகமாக பணம் நகைகள் இருப்பதை தெரிந்துக்கொண்ட அந்த வீட்டின் பணியாளர்கள் மூவரும் அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சிறிது காலம் தங்கையின் வீட்டில் தங்கியிருப்பதற்காக மலர்கொடியின் அண்ணன் ஆனந்தன் மலர்கொடியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
கொலை
இதனிடையே கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூன்று பணியாளர்களும், வீட்டில் இருந்த சித்த மருத்துவர் மலர்கொடி மற்றும் அவரது அண்ணன் சித்த மருத்துவர் ஆனந்தன் ஆகியோரை நாற்காலியில் கட்டிபோட்டு அடித்துள்ளனர். அப்போது மலர்கொடி கூச்சலிட்டதால் அவர் முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தலைமறைவு
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சக்திவேல், அழகர்சாமி ஆகிய இரண்டு பணியாளர்கள் 2002ம் ஆண்டு கைது செயப்பட்டனர். ஆனால் ராமகிருஷ்ணன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், 20 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திண்டுக்கலுக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. அதன்படி, பாண்டி பஜார் காவல்துறையினர் திண்டுக்கல் சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்ததை குறித்து காவல்துறையினரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.