அரசியல்சமூகம்

நாளை விசாரணைக்கு வருகிறது அதிமுக வழக்கு; நடைபெறுமா பொதுக்குழுக் கூட்டம் ?

நாளை மறுநாள் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

பொதுக்குழுக் கூட்டம்

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை மறுநாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் ஒற்றத் தலைமை விவகாரத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஓபிஎஸ் தரப்பு இரட்டை தலைமை தொடர வேண்டும் என்றும், இபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமை வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை உயர் நீதிமன்றம்

மனு தாக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், அந்த வழக்கை முன் கூட்டி விசாரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

உரிமையியல் நீதிமன்றம்

அதற்கு சூரியமூர்த்தி அதிமுகவை சேர்ந்தவரே இல்லை. அதனால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சமர்ப்பித்தது. இதனையடுத்து நீதிமன்றம் விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ( ஜூன் 28 ) ஒத்திவைத்தது.

ஓபிஎஸ், இபிஎஸ்

தடை விதிக்க வேண்டும்

இந்நிலையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கட்சி விதிகள்படி நிர்வாகரீதியாக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவை பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள். அவற்றை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.

நாளை விசாரணை

மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டும் என்று அதில் முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார். அதன்பெயரில் அந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Related posts