‘நவ’ என்றல் வடமொழியில் ‘படகு’ என்று பொருள். இந்த ஆசன நிலை படகு போல் இருப்பதால் படகாசனம் ஆகிறது. தண்ணீரில் படகு தனது சமநிலை மாறாமல் எப்படி செல்கிறதோ அது போல உடலின் சமநிலையை இந்த ஆசனம் பராமரிக்கிறது.
அதாவது, மணிப்பூரகம் (Pancreas) சுவாதிட்டானம் (Adrenal) ஆகிய இரு சக்கரங்களையும் இயக்குகிறது. மணிப்பூரகமும் சுவாதிட்டானமும் நன்கு இயங்கும் போது தன் மதிப்பு, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு ஆகிய உணர்வுகள் அதிகரிக்கின்றன. இந்த உணர்வுகள் உடல் என்னும் படகின் சமநிலையை பாதுகாக்கிறது.
படகு போன்ற நிலையில் ஆடாமல் இருந்து பழகிவிட்டால் மனமும் எந்த தடுமாற்றமும் இன்றி வானத்தில் சஞ்சலமின்றி பறக்கும் பறவை போல் சீராக இலக்கை நோக்கி பயணிக்கும். படகும் மனமும் ஆடாமல், கவிழாமல் கொண்டு போகும் படகோட்டி இந்த நவாசனம்.
நவாசனத்தின் மேலும் சில பலன்கள் :
மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
சீரண மண்டலத்தின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது.
தொப்பையைக் கரைக்க உதவுகிறது.
ஹைப்போ தைராய்டு பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.
முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
குடலிறக்கத்தை போக்க உதவுகிறது.
சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது.
பிராஸ்டேட் சுரப்பியின் (Prostate gland) செயல்பாட்டை செம்மையாக்குகிறது.
செய்முறை :
விரிப்பில் கால்களை நீட்டி அமரவும்.
கால்களை சற்று மடக்கி, மேலே தூக்கவும். அவ்வாறு தூக்கும் போது உடலை சற்று பின்னால் சாய்க்கவும்.
கால்களை வளைக்காமல் தரையிலிருந்து சுமார் 45 degree உயரத்துக்கு நீட்டவும்.
கைகளை கால்களுக்கு மேல் நீட்டவும்.
இப்பொழுது உங்களின் புட்டம் மட்டுமே தரையில் இருக்கும். உங்கள் உடலை பார்க்க ஒரு படகு போல் இருக்கும்.
இதே நிலையில் 20 வினாடிகள் இருந்த பிறகு கால்களை தளர்த்தி நேராக உட்காரவும்.
குறிப்பு :
முதுகுத்தண்டு கோளாறுகள், தீவிர முதுகு வலி, இடுப்பு பிரச்சினை, அதிக அல்லது குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நவாசனத்தை பயிலக் கூடாது.