டெல்லி: டெல்லியில் நான்கு மாடி வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தீ – விபத்து
டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் கேமரா தயாரிக்கும் கம்பெனி இருக்கும் கட்டிடத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடி கட்டிடமான இதில் முதல் தளத்தில் தீ பிடித்து வேகமாக கட்டிடம் முழுவதும் பரவி இருக்கிறது. இதை டெல்லியின் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சமீர் சர்மா உறுதிப்படுத்தினார்.
தீயணைப்பு துறையினர்
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். சுமார் 30 தீயணைப்பு வாகனகள் வந்து மீட்பு பணியில் இறங்கினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 70 பேர் வரை மீட்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மீட்பு பணி
தீயணைப்பு துறையினர் கட்டிடத்தின் ஜன்னல் பகுதியை உடைத்து உள்ளே சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர். அதில் 40க்கும் அதிகமானோர் காயம் அடைந்து இருப்பதாக தீயணைப்பு அதிகாரி சுனில் செளத்ரி தெரிவித்தார். மேலும், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இன்னும் பலர் கட்டிடம் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மீட்க்கும் பணியில் தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறார்கள்.
வழக்கு பதிவு
இதனையடுத்து தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதனை தொடர்ந்து கட்டிடத்தின் உரிமையாளரை கைது செய்தனர். மேலும், எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.
அரசியல் தலைவர்கள்
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இது மிகவும் வருத்தமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.