சமூகம்தமிழ்நாடு

ஒரே பெயருக்கு 2100 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு, பாமர மக்களை ஏமாற்றிய சார்பதிவளர்!

தூத்துக்குடி மாவட்டம், விவசாயிகளுக்கு சொந்தமான 2100 ஏக்கர் நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பத்திரப்பதிவு

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன் பட்டி, செந்திலாம் பண்ணை ஆகிய பகுதியை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு சொந்தமான 2100 ஏக்கர் நிலத்தை, புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து 32 வயதான சார்பதிவாளர் மோகன்தாஸ் சட்டவிரோதமாக கோவையை சேர்ந்த ஆதித்யா கிரீன் டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு பத்திர பதிவு செய்து கொடுத்து இருக்கிறார்.

மீட்டு தரவேண்டும்

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான 2100 ஏக்கர் நிலத்தின் பட்டா, அடங்கல் மற்றும் பத்திரத்துடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு சார்பதிவாளர் மோகன்தாசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு கைமாற்றி கொடுத்த தங்களுக்கு சொந்தமான விளை நிலங்களை மீண்டும் தங்கள் பெயருக்கு பத்திர பதிவு செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

4 தலைமுறைக்கானது

83 வயதான செந்தில் ஆறுமுகம் என்ற முதியவரின் 4 தலைமுறைக்கு சொந்தமான இடத்தை, பராமரிக்க ஆள் இல்லாததால் அந்த இடங்களில் 2 கிராமங்கள் உருவாயின எனவும், செந்தில் ஆறுமுகம் உச்சநீதிமன்றம் வரை சென்று தனது குடும்ப சொத்தை மீட்டு உத்தரவு பெற்றதாகவும், இதனைத்தொடர்ந்து செந்தில் ஆறுமுகத்தால் பவர் வழங்கப்பட்டு கோவை ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு 2100 ஏக்கர் நிலத்தையம் மொத்தமாக பத்திர பதிவு செய்ததாகவும் சார்பதிவாளர் மோகன் தாஸ் தெரிவித்தார்.

இதற்கு ஆதாரமான சுப்ரீம் கோர்ட் நகல் எங்கே என்று கேட்டபோது இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என மோகன்தாஸ் சமாளித்துள்ளார். இரு கிராமங்களை உள்ளடக்கிய இந்த 2100 ஏக்கர் நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு பத்திர பதிவு செய்ய, ஒன்றரை கோடி வரை சார்பதிவாளர் மோகன்தாஸ் கையூட்டாக பெற்றிருக்கிறார் என விவசாயிகள் குற்றசாட்டு வைத்தனர்.

பணியிடை நீக்கம்

ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை இவ்வாறு சட்டவிரோதமாக தனி நபரின் பெயருக்கு பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் மோகன்தாஸை தற்கால பணியிடை நீக்கம் செய்ய துணை பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து சார்பதிவாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் பின்னணியையும் போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

Related posts