திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலியில், பாரம்பரிய நெல்லை மிட்டேடுக்கும் வகையிலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருகிணைந்த வளர்ச்சி திட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் திருவிழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு
இதில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். குத்துவிளக்கு ஏற்றி நெல் திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், விதைகள், இயற்கை வேளாண் முறை குறித்த தகவல்கள், கமலை கூணை, இறைவெட்டி, மரக்கால் உள்ளிட்ட பழங்கால விவசாய நீர் பாய்ச்சும் கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து பேசிய அவர், ‘நம் முன்னோர்கள் விவசாயத்தில் சிறந்து விளங்கிய காரணத்தால் தான் நாம் இன்று அதனை பார்க்க முடிகிறது. அதற்காக விழாவும் நடத்துகிறோம். நெல்லை மாவட்டத்தில், சுமார் 11/4 லட்சம் ஏக்கர் நெல் விவசாயம் நடைபெறுகிறது. நெல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் என்பது நமது பாரம்பரியமும், நமது நாகரிகத்தின் அடையாளமாகும். சத்தான பாரம்பரிய நெல், அரிசி ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக அரசும் விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திமுக அரசு
வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட், நேரடி நெல் கொள்முதல் நிலையம், விவசாய கடன் ரத்து, குறிப்பாக விவசாயகளுக்கு என வட்டியில்லா கடன் இந்தியாவிலே தமிழகத்தில் தான் முதல் முறையாக கொடுக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ‘இயற்கை விவசாயத்தில் நெல் உற்பத்தி’ என்ற நூலை வெளியிட்டார். மேலும், விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கினார். விவசாயிகளுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பவர்டில்லர், டிராக்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முக்கிய பிரமுகர்கள்
இந்த விழாவில் நெகிழியை தவிர்த்து மேடையை பனை ஓலை, நெற்கதிர்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அழகுபடுத்தப்பட்டு இருந்தது. மேலும், முக்கிய பிரமுகர்களுக்கு நெற்கதிர்களான பூங்கொத்து, மாலையும் அணிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், வேளாண் துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.