கர்நாடக மாநிலத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிய இளைஞரை திருவண்ணாமலையில் போலீசார் கைது செய்தனர்.
ஒருதலை காதல்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலம், பெங்களூரு டவுனில் உள்ள சுங்கத்கேட்டெ பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் நாகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். வேலை பார்க்கும் இடம், பெண்ணின் வீடு ஆகிய இடங்களுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாகேஷ் அப்பெண்ணை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆசிட் வீச்சு
கடந்த 28ம் தேதி காலையில் நாகேஷ் அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்துள்ளார். இதனிடையே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன் காதலை அப்பெண் ஏற்க மறுத்ததால், நாகேஷ் தான் ஒளித்து வைத்திருந்த ஆசிட்டை அப்பெண்ணின் முகத்தில் வீசி விட்டு தப்பினர். இதனால், படுகாயமடைந்த அப்பெண்ணை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
4 தனிப்படை
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகேஷை பிடிக்க கர்நாடக போலீசார் 4 தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படை போலீசாரின் விசாரணையில் நாகேஷ், திருவண்ணாமலை கிரிபாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் காவி உடை அணிந்து சாமியாரோடு சாமியாராக திரிந்து வந்ததாக தகவல் கிடைக்கப்பட்டது.
கைது
தனிப்படை போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் திருவண்ணாமலையில் ஓரிரு தினங்களாக முகாமிட்டு நாகேஷ் குறித்து நோட்டீஸ் ஒட்டி தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நாகேஷ் செங்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்திற்கு தியானத்திற்காக அடிக்கடி சென்று வருவதாக தெரியவந்தது. போலீசார் மாறுவேடத்தில் ஆசிரமத்தின் அருகில் ரகசியமாக நின்று கண்காணித்து கொண்டிருந்திருக்கின்றனர்.
இதனிடையில் நாகேஷ் காவி உடை அணிந்து தியானதுக்காக ஆசிரமம் வந்திருந்த நிலையில் போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நாகேஷை போலீசார் கர்நாடக மாநிலத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.