கன்னியாகுமரியில் தென்தாமரைகுளம் அருகே ஜெபம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்ற போலி மதபோதகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவி கடத்தல்
நாகர்கோவில் அருகே உள்ள கரம்பவிளையைச் சேர்ந்தவர் திருமணமான செந்தில்குமார் (34). செந்தில்குமாருக்கு பூதப்பாண்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து அவர் அடிக்கடி அந்த தொழிலாளி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். தொழிலாளியின் மூன்றாவது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனைப் பார்த்த செந்தில்குமார் தனக்கு ஜெபம் செய்யத்தெரியும் என்று கூறி ஜெபம் செய்தால் உடல்நலம் சரியாகிவிடும் என்று கூறி அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு தொழிலாளியின் 2வது மகள் மாயமாகியுள்ளார். நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செந்தில்குமார் மீது சந்தேகப்பட்டு அவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், விசாரணை ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியில் செந்தில்குமார் இருப்பது தெரியவந்தது. செந்தில்குமாரின் மனைவி உதவியுடன் மறைந்திருந்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்து அந்த மாணவியை மீட்டனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமாரை நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கு அடைத்தனர். மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெபம் செய்வதாக கூறி போலி போதகர் மாணவியை கடத்திச் சென்று, அவரை 4 மாதங்களுக்கு பிறகு போலீசார் மீட்டதும், குமரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

