மணலியில் பெண் ஒருவரின் தற்கொலையை தொடர்ந்து, ப்ரி பயர் கேமின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை சக நண்பர்கள் திருடிக்கொண்டதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி
நேற்று மணலியில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி இலட்சக்கணக்கான பணங்களை இழந்து மன உளைச்சலுக்கு ஆளான பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பலரிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கரூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இளைஞர் தற்கொலை
கரூர் சிவசக்தி நகரை சேர்ந்த 23 வயதான இளைஞர் ப்ரி பயர் விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளார். இந்நிலையில் இவரது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை சக நண்பர்கள் திருடியுள்ளனர். இதனால் மனமுடைந்த இளைஞர் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
வாட்ஸப் ஸ்டேட்டஸ்
அந்த ஸ்டேட்ஸில், ‘கூட இருந்தே எப்படி குழி பறிக்க தோணுது, இப்ப கூட ஒன்னும் இல்ல, யாருன்னு சொல்லிடுங்க, வேற நம்பர்ல இருந்து ஐடிய அனுப்பிடுங்க ப்ளீஸ். டிப்ரெஷன்ஹா இருக்கு யாரும் கேம்கு அடிக்ட் ஆகாதீங்க. என்னை மாதிரி யாரும் ஏமாறாதீங்க, லைப்ல ஏதாச்சும் அச்சீவ் பண்ணுங்க’ என மன உருக்கத்தோடு வாட்ஸப் ஸ்டேட்டஸில் பதிவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
உயிர்க்கொல்லி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் இடம்பெறுகிறது. காவல்துறை டிஜிபி-யே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம் என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களைத் தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?’ என்று தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
அரசு உறுதியாக உள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யக் கொண்டுவரப்பட்ட சட்டம் வளமானதாக இல்லை.
அவசரகதியில் சட்டம் கொண்டுவரப்பட்டதால் அந்த சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நடந்துவரும் திமுக ஆட்சியில் உறுதியான சட்டமாகக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிக்கவேண்டும் என்பதில் இந்த அரசு மிக உறுதியாக உள்ளது’ என்று பேசினார்.
தொடரும் இந்த ஆன்லைன் கேம் மரணங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.