தாம்பரம் அருகே கொள்ளையில் ஈடுப்பட்ட 3 பேர், சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசாரிடம் பிடிபட்டனர்.
பெட்ரோல் பங்க்
சென்னை தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவர் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தி வருகிறார். ஊழியர்கள் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் பெட்ரோல் பங்கை மூடிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
கொள்ளை சம்பவம்
அதன்பிறகு மறுநாள் காலையில் சுமார் 5 மணிக்கு பெட்ரோல் பங்கை திறப்பதற்காக ஊழியர் வந்திருக்கிறார். அப்போது பெட்ரோல் பங்க் பின் பக்கம் உள்ள மேனேஜர் அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
செல்போன் திருட்டு
இதனையடுத்து உரிமையாளர் தாமோதரன் அறைக்குள் சென்று பார்த்தபோது கல்லாவில் வைக்கப்பட்டு இருந்த 10,000 ரூபாய் மற்றும் விலை உயர்ந்த செல்போன் போன்றவை திருட்டு போய்யிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு பால் கடையிலும் திருட்டு அரங்கேறியுள்ளது. அந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3,000 ரூபாய் பணமும் மற்றும் நெய் டப்பாக்கள் திருட்டு போயிருப்பதாக கூறப்படுகிறது.
விசாரணை
மேலும், சம்பவம் குறித்து பெருங்களத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த, புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதனைதொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர்.
சிசிடிவி காட்சிகள்
அதில் அந்த கொள்ளையர்கள் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம், செல்போன் போன்றவற்றை கொள்ளை அடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
மகாபலிபுரத்தில் ரூம்
மேலும், அங்குள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் அலசினர். சுமார் 73 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பிறகு சமந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த கொள்ளையர்கள் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
போலீசார் மகாபலிபுரம் சென்று கொள்ளையர்கள் மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான மதன் என்பவரும், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கௌதம் குமார் மற்றும் சென்ட்ரல் பல்லவன் சாலையைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
வாக்குமூலம்
திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தை திருடி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு அந்த பணத்தில் மகாபலிபுரத்தில் ரூம் எடுத்து மது அருந்தி உல்லாசமாக இருந்ததாக குற்றவாளிகள், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.