பாஜக செய்திதொடர்பாளரின் இஸ்லாமியம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தால் இந்தியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய பொருட்களை நீக்கம் செய்து இஸ்லாமிய நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
சர்ச்சையான கருத்தை
தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில், இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையான கருத்தை கூறியிருக்கிறார். இந்த கருத்து இழிவு படுத்தும் வகையில் உள்ளது என சவுதி அரேபிய கூறியுள்ளது. குவைத், கத்தார், ஈராக், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், சவுதி அரேபிய, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலத்தீவு, லிபியா, இந்தோனேஷியா மற்றும் ஈரான் ஆகிய 15 க்கும் அதிகமான நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு
இஸ்லாமிய நாடுகள் இந்திய தூதர்களை வரவழைத்து தங்களது எதிர்ப்பையும் கூறின. மேலும், நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு உடனே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்திய பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பாகிஸ்தானும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கருத்து மிகவும் இழிவானதாக உள்ளது என்றும், இந்த கருத்துக்கள் பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் பாதித்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான வகுப்புவாத வன்முறை அதிகரித்துவருவதாக பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது. மோடியின் ஆட்சியில் இந்தியா மத உரிமைகளை ஒடுக்குவதாகவும், இஸ்லாமியர்களை துன்புறுத்துவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷிபாஷ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
உரிய நடவடிக்கை
இஸ்லாமியம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுப்பியவரை பாஜக நீக்கம் செய்துள்ளதகவும், மேலும் இந்திய வெளியுறவுத்துறை ‘இந்திய அரசு அனைத்து மதங்களையும் மிகவும் மரியாதையுடன் நடத்துகிறது எனவும், மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்தை கூறிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனவும் கூறியுள்ளது.
நுபுர் சர்மா போன்றோரின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் அரபு நாடுகள் நடவடிக்கை எடுக்கும் நோக்கில், எரிபொருள்களை தடை செய்வது மற்றும் வேலைவாய்ப்பினை தடைசெய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்திய அரசால் வேலை வாய்ப்பினை வழங்க முடியுமா என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.