நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலில் தடையை மீறி காலனி அணிந்து நடந்ததற்காக, விக்னேஷ் சிவன், தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
திருமணம்
ஆறு ஆண்டுகள் காதலுக்கு பிறகு நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருப்பதி தரிசனம்
முதலில் இவர்கள் தங்களுடைய திருமணத்தை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் அங்கு வந்து செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் திருமணத்தை சென்னையில் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் முடிந்த கையேடு நேற்று திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
சர்ச்சை
சாமி தரிசனத்தை முடித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி கோவிலுக்கு முன் போட்டோ எடுத்துள்ளனர். அப்போது அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிய தடை விதித்த பகுதியில் காலணி அணிந்து போட்டோ எடுத்தது பெரும் சர்ச்சையானது. இதனைதொடர்ந்து இந்த சம்பவம் தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இதனால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கபோவதாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மன்னிப்பு கடிதம்
இந்நிலையில், விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ”திருமணம் முடிந்தபிறகு வீட்டுக்கு கூட போகாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தோம். இதனையடுத்து கோவிலில் இருந்து வெளியே வந்த எங்களை நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர்.
இதனால் அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோவில் முன் வந்தோம். எங்களைப் பார்த்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோ எடுத்துகொண்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நாங்கள் நடமாடி கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டோம். இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று விக்னேஷ் சிவன் அதில் குறிப்பிட்டிருந்தார்.