பயணம்

ஐ!!!ரோப்பா – மலைக்க வைக்கும் மாட்ரிட் நகரம்! – ஒரு சிறப்பு விசிட்

ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் தான் மாட்ரிட். கால்பந்து விளையாட்டுக்கு பெயர்போன இந்த நகரத்தில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏராளமான இடங்களும் உள்ளன. அவற்றுள் ஐந்து தலைசிறந்த சுற்றுலா தலங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

பிராடோ அருங்காட்சியகம் :

8000 ஓவியங்கள்,700 க்கும் மேற்பட்ட சிற்பங்கள் என்று பிரம்மாண்டமான காலை பொக்கிஷங்களை தனக்குள் வைத்திருக்கிறது இந்த அருங்காட்சியகம். மூன்று நிலைகளில் கிட்டத்தட்ட 100 அறைகளில் இந்த கலைப்பொக்கிஷங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.

மிகவும் அரிதான இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை 12 முதல் 19 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தீட்டப்பட்டவை.

Buen Retiro பூங்கா :

மாட்ரிட் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்கா 125 ஹெக்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15,000 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன என்பது நம்மை ஆச்சர்யமூட்டும் தகவல்.

இந்த பூங்காவில் எண்ணற்ற தோட்டங்களும், அடர்த்தியான மரங்கள் நிறைந்த பாதைகளும் உள்ளன.

பூங்காவின் நடுவே கம்பீரமாக காட்சியளிக்கிறது முழுக்க முழுக்க கண்ணாடியால் கட்டப்பட்ட ஒரு சிறிய அரண்மனை. இதற்கு crystal palace என்று பெயரிட்டுள்ளனர். இந்த கட்டிடம் நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று தான்.

2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் ‘அஸ்கு லஸ்கா’ பாடலில் இந்த கண்ணாடி அரண்மனையை காண்பித்திருப்பார்கள்.

1887 ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையை ஒட்டி ஒரு பெரிய குளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் படகு சவராய் செய்ய ஏராளமான பயணிகள் குவிகின்றனர்.

Royal Palace :

தற்பொழுது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த கட்டிடம் தான் ஒரு காலத்தில் ஸ்பெயின் நாட்டின் மன்னர்களின் ஆஸ்தான குடியிருப்பு பகுதியாக விளங்கியது.

18 ஆம் நூற்றாண்டில் ஐந்தாம் பிலிப் மன்னரால் நிறுவப்பட்ட இந்த பிரம்மாண்டமான அரண்மனையில், எண்ணற்ற அறைகள் உள்ளன. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுவர்கள்,கூரை என எங்கு பார்த்தாலும் அழகிய காலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பார்ப்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக எழுப்பப்பட்டுள்ளது இந்த அரண்மனை.

பிளாசா மேயர் (Plaza Mayor) :

மூன்றாம் பிலிப் மன்னரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த இடம் ஒரு காலத்தில் வணிகம் செய்வதற்கான பகுதியாக விளங்கியது. பின்னாளில், மல்யுத்தம், காளையை அடக்கும் போட்டிகள் என சாகச நிகழ்ச்சிகள் நடத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டது.

1790 ஆம் ஏற்பட்ட பெரும் தீவிபத்துக்கு பிறகு, புனரமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை தான் நம்மால் இன்று காண முடிகிறது. இந்த பகுதியில் இன்று நிறைய சிறு சிறு உணவகங்கள், மற்றும் கடைகள் உள்ளன.

Puerta del Sol :

மாட்ரிட் நகரத்தின் இதயம் என்று இந்த பகுதியை அழைக்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த இடம், தற்பொழுது சுற்றுலா பயணிகள் தங்கள் மாலைப்பொழுதை இனிதாக கழிக்கும் இடமாக மாறியுள்ளது.

1808 ஆம் ஆண்டு மாவீரன் நெப்போலியன் ஸ்பெயின் நாட்டின் மீது படையெடுக்க விரும்பியபோது அதற்கான எதிர்ப்பு பிரகடனம் இந்த சதுக்கத்தில் வைத்து தான் நிகழ்த்தப்பட்டது.

Related posts