இந்தியாசமூகம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சக மனிதர்களிடையே வேறுபாட்டை உருவாக்குகிறார்கள் – சித்தராமையா ஆவேசம்!

‘நான் ஒரு இந்து, நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை, விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்’. மாட்டிறைச்சி உண்ணுவது மற்றும் பசுவதை தடை சட்டத்தை எதிர்க்கும் சித்தராமையா.

பசுவதை தடை

பசுவதை தடை சட்டம் என்பது பசுக்களை இறைச்சிக்காக கொள்ளுவது, மாட்டிறைச்சி கடத்துவதை தடுக்கும் சட்டமாகும். இச்சட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ளது. இச்சட்டத்தை மீறும் நபர்களுக்கு 3 முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்குவதோடு மட்டுமின்றி 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இக்குற்றத்தில் தொடர்ச்சியாக சிக்குபவர்களுக்கு 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். பசுக்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களுக்கும் மற்றும் வாங்கும் நபர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

மாட்டிறைச்சி சாப்பிடுவேன்

கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கர்நாடக முன்னாள் முதல்வரும் மற்றும் அம்மாநிலத்தின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மத வெறுப்புணர்ச்சி மற்றும் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து பகிரங்கமாக பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது ‘நான் ஒரு இந்து. இதுவரை நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால், நான் விரும்பினால் நிச்சயம் அதை சாப்பிடுவேன். என்னை கேள்வி கேட்க நீங்கள் யார்?

நீங்கள் யார்?

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. ஆதிதிராவிடர்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் என அனைவரும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக இருக்கின்றனர். எனவே, பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்தி இருப்பது சரியல்ல. சட்டபையிலும் இதை நான் சொல்லியிருக்கிறேன். மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என சொல்ல நீங்கள் யார்? ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சக மனிதர்களிடையே வேறுபாட்டை உருவாக்குகிறார்கள்’ என சித்தராமையா கூறினார்.

கண்டனம்

சித்தராமையாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில பாஜக செய்தித் தொடர்பாளர், சலவாதி நாராயணசாமி ‘சித்தராமையா மாட்டிறைச்சி சாப்பிட விரும்பினால் சாப்பிடட்டும். ஆனால், அதற்கு அவர் வக்காலத்து வாங்க கூடாது. இறைச்சி சாப்பிட்டு கோவிலுக்கு சென்றவர் சித்தராமையா. அதையும் அவர் நியாயப்படுத்தினார். சித்தராமையா எப்போதும் பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சிக்கிறார். மேலும், பாஜகவுக்கு எதிராக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை தூண்டி விடுவது இவரது வழக்கம்’ என கூறியுள்ளார்.

பசுவதை தடை சட்டம் கர்நாடகாவில் ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts