தற்போது இயக்குனர் பாலா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சூர்யா மீண்டும் ‘ஜெய்பீம்’ இயக்குனருடன் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிமுகம்
1997ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இந்த படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்திருப்பார். இதனையடுத்து 2003ம் வெளியான காக்க காக்க படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். அதனைத்தொடர்ந்து பல நல்ல படங்களை தேர்ந்துதெடுத்து நடித்து கொண்டிருக்கிறார்.
ஜெய்பீம் இயக்குனர்
கடந்த ஆண்டு த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் ‘ஜெய் பீம்’. படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது. இயக்குநர் த.செ ஞானவேலுவுக்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்தது. மேலும், ஆஸ்கர் குழுவே அந்த படத்தை பாராட்டி முதன் முறையாக தங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஜெய்பீம் படக் காட்சிகளை இயக்குநரின் பேட்டியுடன் வெளியிட்டனர்.
சூர்யா 41
பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனகளை பெற்றது. அதனையடுத்து சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மீனவர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மற்றும் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து முடிந்துள்ளது.
அடுத்த படம்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனையடுத்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா இயக்கத்திலும் நடிக்கவும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்ததாக ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ. ஞானவேலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் த.செ. ஞானவேல் சூர்யா இருவரும் இணைகிறார்கள் என்ற தகவல்கள் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்