இளம்பெண் ஒருவர் வாட்ஸ்ஆப் லிங்கை கிளிக் செய்ததால் கடன் பெறாமலேயே கடன் பெற்றுள்ளதாக அவர் புகைப்படத்தையும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கடனை திரும்ப செலுத்தக் வேண்டும் என மிரட்டியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆன்லைன் மூலம் கடன்
எந்த வித டாக்குமெண்ட் வேண்டாம், செக் லீப் வேண்டாம், கையெழுத்து கூட வேண்டாம். மொபைல் போனில் அப்ப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கடன் கேட்டு பதிவு செய்தலே போதும் அடுத்த நொடியே உங்கள் அக்கவுண்டில் பணம் கிடைக்கும் என மக்களிடம் பணம் பறிக்கும் லோன் ஆப்களின் கொடூரம் அதிகரித்துள்ளது.

மக்களும் கேட்டவுடன் தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக பலரும் ஆபத்தை உணராமல் அந்த அப்ப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து ஆயிரக்கணக்கில் கடன் வாங்குகிறார்கள். அதன் பிறகு அந்த கடனுக்காக ஆயிரக்கணக்கில் வட்டி கட்டுகின்றனர்.
ஆனால் சரியான நேரத்தில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் கடனை அவர்கள் வசூலிக்கும் ரகமே வேறு விதமாக இருக்கும். கடனை திருப்பி தராதவர்களின் குடும்பத்துப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து WhatsApp மூலம் பரப்புகின்றனர். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என அரசும், காவல்துறையினரும், ரிசர்வ் வங்கியும் எச்சரித்துள்ளது. ஆனால் பொது மக்களின் விழிப்புணர்வின்மை காரணமாக கடன் செயலிகளின் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இளம் பெண்ணுக்கு மிரட்டல்
இந்த கும்பல் மற்றோரு புதுவிதமான மோசடியில் இறங்கியுள்ளது. அதாவது இத்தனை நாட்கள் கடன் கொடுத்து பிறகு அதிக வட்டி வசூல் செய்தது. ஆனால் தற்போது கடன் பெறாமலேயே WhatsApp லிங்கை தொட்டதால் கடன் பெற்றதாக கூறி அதை திருப்பி கட்ட சொல்லி மிரட்டுவதோடு ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவதாகவும் கோவையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் புகாரை கூறியுள்ளார்.

கோவை துடியலூரைச் சேர்ந்த இளம்பெண் சரண்யா. இவரத்தின் பூர்வீகம் ஊட்டி. சரண்யாவின் மொபைல் போனிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வாட்சப் ஆப்பில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. எதார்த்தமாக அது என்னவென்று பார்ப்பதற்காக கிளிக் செய்துள்ளார். அதில் ஆன்லைன் மூலம் கடன் தருவதாக வந்துள்ளது. இதை பார்த்த சரண்யா அந்த லிங்கை விட்டு வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் நீங்கள் கடன் பெற்றுள்ளீர்கள். எனவே அந்த தொகையை திரும்ப செலுத்துமாறு கூறியுள்ளனர்.
புகார்
அதற்கு சரண்யா நான் கடன் வாங்கவே இல்லை என கூறியுள்ளார். ஆனால் அந்த அழைப்பில் பேசிய நபர் நீங்கள் கடன் வாங்கியுள்ளீர்கள் கட்டாயம் அதை திருப்பி கட்டியே ஆகவேண்டும் என கூறியுள்ளனர். சரண்யா அதை மறுக்கவே தொடர்ந்து போன் செய்து தொல்லை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி சரண்யாவின் குடும்பத்தினரின் புகைப்படங்களை ஆபாச வீடியோவாக சித்தரித்து சரண்யாவிற்கு அனுப்பி கடனை கட்டவில்லை என்றால் இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்பி விடுவோம் என மிரட்டயுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் சரண்யா புகார் அளித்துள்ளார். மேலும், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டேன் என்றும் இனி யாரும் வாட்சப்பில் வரும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இதுபோன்ற லிங்குகளை யாருக்கும் பார்வேட் செய்ய வேண்டாம். நீங்களும் இவ்வகையான லிங்குகள் வந்தால் உடனடியாக அதை டெலிட் செய்யுங்கள். என்னைப் போல் யாரும் கஷ்டப்பட வேண்டாம் என கண் கலங்கி வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

