வேலைக்கு சேர்ந்த இரண்டு வாரங்களில் கடையில் பணம், வெள்ளி நகைகளை கடை ஊழியர் திருடிச் சென்றுள்ளார்.
வெள்ளி கடை
சென்னை சவுகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் ஜெலாம்சிங். இவர் பூக்கடை கிருஷ்ண ஐயர் தெருவில் பிளாஸ்டிக் மொத்த விற்பனை மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
ஜெலாம்சிங் கடைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜாராம் என்ற நபர் வேலை கேட்டு வந்துள்ளார். ராஜாராம் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் ஜெலாம்சிங் அவரை தன் வீட்டில் ஒருவராக நினைத்துள்ளார். கல்லா சாவி, கடை சாவியையும் ராஜாராமிடம் ஜெலாம்சிங் கொடுத்துள்ளார். ராஜாராம் மீது அதிகப்படியான நம்பிக்கையை ஜெலாம்சிங் வைத்துள்ளார். இந்நிலையில் கடையில் தங்கியிருந்த ராஜாராம், இரண்டு நாட்கள் முன்பு தனது சகோதரன் பிரகாராம் வரவழைத்துள்ளார்.

கொள்ளை
அன்று இரவு ராஜாராமும் பிரகாராமும் கடை கல்லா பெட்டியில் இருந்த 7.85 லட்சம் ரூபாய் பணம், 19 வெள்ளி காசுகள், வெள்ளியில் செய்த விநாயகர் சிலை, வெள்ளி பூட்டுகள், இரண்டு செல்போன் முதலியவற்றை கடையிலிருந்து திருடிச் சென்றுவிட்டனர்.
ஆனால் அன்றிரவு ரோந்து பணியிலிருந்த பூக்கடை போலீசார், வால்டாக்ஸ் சாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ராஜாராமும் பிரகாராமும் பிடித்து விசாரித்துள்ளனர். அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

எனவே போலீசார் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அதில் பணம், வெள்ளி பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரையும் பூக்கடை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையின் போது தான் ஜெலாம்சிங் கடையில் வேலை பார்த்தும், அங்கிருந்து கொள்ளையடித்தும் தெரியவந்தது. உடனே பூக்கடை குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

