அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதிக்கீடு முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
10,12 பொதுத்தேர்வு சான்றிதழ்
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் நேரடியாக இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை
இதனிடையே, 11ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதிக்கீடு முறையை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை கடிதம்
அந்தக் கடிதத்தில், ‘இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின் படி 2022- 23 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது, மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுபடி, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 31 சதவிகிதம், SC பிரிவினருக்கு 18 சதவிகிதம், ST பிரிவினருக்கு 1 சதவிகிதம், MBC பிரிவினருக்கு 20 சதவிகிதம், BCM பிரிவினருக்கு 3.5 சதவிகிதம், BC பிரிவினருக்கு 26.5 சதவிகிதம் என்ற விகிதத்தில் இடஒதுக்கீடு அமைய வேண்டும். பொதுப்பிரிவினருக்கான 31% இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும், பொதுப்பிரிவினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயாரித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்தந்த பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
அனைத்துப்பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி இடஒதுக்கீடு பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டுள்ளதுடன், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா ? என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.